காற்றை சுத்திகரித்து சுவாசத்துக்கு உதவும் முகக்கவசம்! எல்.ஜி. நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!

0
7

LG நிறுவனம் PuriCare Wearable Air Purifier என்ற முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த அதிநவீன முகக்கவசம், காற்றை சுத்திகரித்துத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகக் கவசத்தில் இரண்டு ஃபில்டர்கள் உள்ளன. இவை காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்புகிறது. மேலும், மூன்று வேக நிலைகளைக் கொண்ட இரட்டை விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை, தானாக இயங்கி தேவையான காற்றை உள்ளே அனுப்பும்.

இந்த முகக் கவசத்தை அணிபவர்களின் சுவாசத்தின் சுழற்சி மற்றும் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்ப இதை மாற்றி அமைக்க ஏதுவாக, இதனுள் ஒரு சுவாச சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. காற்றை சுவாசிக்கும்போதும், வெளியேறும்போதும் அதன் வேகத்தைக் கண்டறியவும் சென்சார் உள்ளது. இது, காற்றை உட்புகச் செய்யும் விசிறிகளின் வேகத்தை பயனரின் தேவைக்கு ஏற்ப மாற்றும். இதனால், அனைத்து தரப்பினரும், அனைத்து சூழலிலும் இந்த முகக் கவசத்தைப் பயன்படுத்த முடியும். இதை அணிந்தவர்களுக்கு சுவாசிப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

இது குறித்து எல்.ஜி., நிறுவனம் கூறும்போது, மூக்கு மற்றும் கன்னத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காற்று கசிவைக் கட்டுப்படுத்தும் வகையில், LG Puricare வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 820 எம்.ஏ.எச்., பேட்டரி உள்ளது. இதனால், எட்டு மணிநேர செயல்பாட்டையும் இரண்டு மணிநேர உயர் பயன்முறையையும் வழங்க முடியும். இதில், யுவி – எல்.ஈ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை சார்ஜ் செய்யும் வசதியுள்ளது. மேலும், மாற்றக்கூடிய காதுப் பட்டைகளையும் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசத்தில் விலை, எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற விவரத்தை எல்.ஜி. நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry