“தென்னிந்தியாவின் நுழைவாயில்” என்று அழைக்கப்படும் சென்னை நகரத்திற்கு இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தனது பிறந்தநாளை சென்னை தினமாக இந்நகரம் கொண்டாடுகிறது. சென்னையின் பரிணாம வளர்ச்சி, அதன் நெகிழ்ச்சி, தகவமைப்பு மற்றும் பல்வேறு கலாச்சார தாக்கங்கள் சென்னை மாநகரின் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குகிறது.
1608ல் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்கள் சூரத் நகரை வந்தடைந்தன. 1615ல் ஆங்கிலத் தூதரான சர் தாமஸ் ரோ, சக்கரவர்த்தி ஜஹாங்கீரின் தர்பாருக்குச் சென்று, கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார். பிறகு, வணிகத்திற்காக சூரத்தில் ஒரு கிடங்கை அவர் கட்டிக்கொண்டனர்.
Also Read : ஸ்மார்ட் மின் மீட்டர் என்றால் என்ன? சங்கங்கள் எதிர்ப்பது ஏன்? 19 ஆயிரம் கோடி ரூபாய் வீண் செலவா?
அதற்கு முன்பாகவே மசூலிப்பட்டனத்தில் டச்சுக்காரர்கள் ஒரு கிடங்கைக் கட்டி, வர்த்தகம் செய்துவந்தனர். அவர்களுடைய கோட்டை பழவேற்காட்டில் அமைந்திருந்தது. இது ஒருபுறமிருக்க, கிழக்கிந்தியக் கம்பனிக்கு கரையோரமாக ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஃப்ரான்சிஸ் டே என்பவர் பழவேற்காட்டிலிருந்து பாண்டிச்சேரி வரை கரையோரமாகவே கப்பலில் பயணம் செய்தார்.
அப்போதுதான் தொண்டை மண்டலத்தின் சோழ மண்டலக் கடற்கரையோரம் இருந்த மீனவ கிராமம் ஒன்றை கண்ட பிரான்ஸிஸ் டே, இந்த இடம்தான் வணிகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என பரிந்துரைத்தார். அதுதான், சாந்தோமுக்கு வடக்கில் மூன்று மைல் தூரத்தில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் இருந்த மதராசாப்பட்டனம்.
இந்த இடத்தின் பெயர் குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துவருகின்றன. சென்னைப் பட்டனம் இருந்த இடத்தில்தான் தற்போது கோட்டை இருக்கிறது என்பதும், மதராசப்பட்டனம் என்ற கிராமம், சென்னைப்பட்டனத்திற்கு அருகே இருந்தது” எனவும் மதராசப்பட்டனம் நூலின் ஆசிரியர் நரசய்யா கூறுகிறார்.
மதராசாப்பட்டனம், சென்னப்ப நாயக்கரின் மகன்களான தாமரல வெங்கடாத்ரி நாயக்கர், தாமரல ஐயப்ப நாயக்கர் ஆகியோர் வசம் இருந்தது. வணிகத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக தங்களை நாடிவந்த ஃப்ரான்சிஸ் டே-விடம் இவர்கள் கூறினார்கள். இதையடுத்து, 1639 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தாமரல வெங்கடாத்ரியும், ஃப்ரான்சிஸ் டேவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூவம் நதிக்கும் எழும்பூர் நதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டி, வணிகம் செய்யும் வகையில் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாண்டுகளுக்கு அங்கிருந்து வியாபாரம் செய்துகொள்ளலாம் என்றும், வரும் வருவாயில் பாதியை நாயக்கருக்கு அளிக்க வேண்டுமென்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதலில் தெலுங்கில் எழுதப்பட்டு, பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்த அந்த மதராசாப்பட்டனம் என்ற மீனவ கிராமம், நகராக மாறி வர்த்தக மையமாக தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றது. வணிகப் பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான கிடங்கினை, கடற்கரைக்கு அருகே 1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனியினர் கட்டி முடித்தனர். அன்றையதினம் புனித ஜார்ஜ் தினம் என்பதால், அந்த கிடங்கிற்கு புனித ஜார்ஜ் கோட்டை என பெயரிடப்பட்டது. இந்தக் கோட்டையை மையமாக கொண்டே ஆங்கிலேயர்களின் துணி ஏற்றுமதி வணிகம் நடந்தது.
கோட்டையில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். இந்த குடியேற்றம் விரைவில் கோட்டை பகுதிக்கு அப்பாலும் விரிவடைந்தது. பல உள்ளூர் வணிகர்களும், துபாஷி என அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் மொழி பெயர்பாளர்களும் வெளியூர்களின் இருந்து அழைத்து வரப்பட்ட நெசவாளர்களும், கூலித்தொழிலாளர்களும் கோட்டைக்கு வெளிப்பகுதியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர்.
Also Read : பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!
கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ’ஒயிட் டவுன்’(வெள்ளையர்கள் நகரம்) எனவும், கோட்டைக்கு வெளியே இடப்பக்கம் உள்ள பகுதிகள் ‘ப்ளாக் டவுன்’ (கருப்பர் நகரம்) எனவும் அழைப்பட்டது. 1906ஆம் ஆண்டு இந்தியா வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக கருப்பர் நகரத்திற்கு’ ஜார்ஜ் டவுன்’ என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் தமிழர்கள் மட்டுமே அதிக அளவில் குடியேறிய நிலையில், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெலுங்கு பேசும் வணிகர்களும், கூலித் தொழிலாளிகளும் கோட்டைப் பகுதியில் குடியேறினார்கள். போர்த்துக்கீசியர்கள், இஸ்லாமியர்கள், ஆர்மீனியர்கள், மார்வாடிகள், பார்சிக்கள், யூதர்கள் என பல இனக்குழுவினரும் சென்னையில் வேலை நிமித்தமாக குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில், பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றான மெட்ராஸ் பிரசிடென்சியின் தலைநகராக சென்னை மாறியது.
ஆங்கிலேயர்களின் கட்டுமானம் சென்னை நகரின் வடிவமைப்பை மாற்றியது. ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகம், உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் போன்ற சின்னச் சின்ன சின்னங்கள் பிரிட்டிஷ் மற்றும் இந்தோ-சராசெனிக் பாணி கட்டக்கலைகளை பிரதிபலிப்பதாய் மாறியது. 1688ஆம் ஆண்டு லண்டனுக்கு அடுத்த மாநகராட்சியாக ’மெட்ராஸ்’ உதயமானது.
ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்திலேயே தமிழர்கள் இந்த நகரத்தில் வளமுடன் வாழ்ந்துள்ளனர்.
சென்னை நகரத்தில் பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாகும். அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கோயில்களைக் கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பரபரப்பான நகரமாக இருந்துள்ளது.
மற்றொரு சான்றாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதராசபட்டினம், நீலாங்கரையன் பட்டினம், ராயபுர பட்டினம் போன்ற துறைமுகப் பகுதிகளுக்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்காக விதிக்கப்பட்ட வரி தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் ஆங்கிலேயேர் காலத்திற்கு முன்பாகவே இந்த நகரம் செழிப்புடன், கட்டமைப்புடன் இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளது.
1996ஆம் ஆண்டு ’மெட்ராஸ்’ மாநகரம் ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் 4ஆவது பெரிய நகரமாகவும், உலக அளவில் முக்கியமான 35 மாநகரங்களில் ஒன்றாகவும் சென்னை விளங்குகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry