கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாகத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எந்த மாதிரியான கடிதம் கொடுத்துள்ளீர்கள் என ஓபிஎஸ் வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார். அதற்கு, ஜூலை 11-ம் தேதி தாங்கள் பிறப்பித்த உத்தரவில், வழக்குக்கு தொடர்பில்லாத ஓபிஎஸ்-க்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தீர்கள், எனவே வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரியிருப்பதாக ஓபிஎஸ் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “உங்கள் கருத்து நீதிமன்றத்தை கலங்கப்படுத்தும் வகையிலும், கீழ்த்தரமாகவும் உள்ளது. நீதித்துறையைக் கலங்கப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டாம். இந்த வழக்கு தொடர்பாக நான் தெரிவித்த கருத்தில் திருப்தி இல்லையென்றால், அதைத் திருத்தம் செய்யக்கோரி என்னையே அணுகி இருக்கலாம்.
Also Read : லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி! கர்நாடக தேர்தலுக்கான நாடகமா?
உத்தரவில் திருப்தி இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், நீதிபதியை மாற்றக் கோருவது கீழ்த்தரமாக இருக்கிறது” என ஓபிஎஸ் தரப்பினருக்குக் கண்டனம் தெரிவித்தார். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherryå