கட்டிப்பிடிப்பதால் உறவுகள் மேம்படாது! போலி தேசியவாதம்! தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கை! மன்மோகன் கடும் விமர்சனம்!

0
79

சீன ஊடுருவல்களை மறைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தவறுகளை மறைக்க வரலாற்றைப் பழிக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

5 மாநில தேர்தல், குறிப்பாக பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ந் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், மன்மோகன் சிங் பேசிய காணொலியைக் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை அவர் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அந்த காணொலியில், “ஒரு பக்கம் மக்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இன்னொரு பக்கம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இன்றைய அரசு, தனது தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் பதவிக்கென ஒரு சிறப்பு கண்ணியம் இருக்கிறது. தவறுகளை மறைக்க வரலாற்றைப் பழிக்கக் கூடாது. நான் 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தபோது, எனது செயல்களின் மூலம்தான் பேசினேன். உலகின் முன்னே, நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் பின்னடையச் செய்ததில்லை. பலவீனமானவர், மவுனமானவர், ஊழல்வாதி என்றெல்லாம் என் மீது தவறாகக் குற்றம்சாட்டிய பாஜக, அதன் பி மற்றும் சி அணிகள், இன்றைக்கு நாட்டின் முன்னே அம்பலப்பட்டு நிற்கின்றன என்பதில் திருப்தியடைகிறேன்.

பொருளாதாரக் கொள்கை குறித்து பாஜக அரசுக்கு ஒரு புரிதலும் இல்லை. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் ஏழைகளாகி வருகின்றனர். பிரச்சினை நம் நாட்டுடன் முடிந்துவிடவில்லை. இந்த அரசு வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்திருக்கிறது.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தவறிவிட்டது. சீனா நமது எல்லையில் அமர்ந்திருக்கிறது. ஆனால், சீன ஊடுருவல்களை மறைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகளை கட்டிப்பிடிப்பதன் மூலம் உறவுகள் மேம்படாது. ஊஞ்சலில் ஆடுவது, அழைக்காமல் பிரியாணி விருந்துக்குச் செல்வது போன்றவற்றின் மூலம் வெளியுறவுக் கொள்கையை நடத்த முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.” இவ்வாறு மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry