போதை ஊசி போட பயிற்சி தரும் மெகா சீரியல்கள்! சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் வக்கிரம்!

0
147

எவன் குடியை எப்படி கெடுக்கலாம்? யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி திருடுவது? ஏமாற்றி பணம் பறிப்பது எப்படி? கள்ளக்காதல் செய்வது எப்படி? என்பதை போதித்து வந்த, மெகா சீரியல்கள், இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டன. அபியும் நானும் என்றொரு சீரியலில், ஒரு சிறுமி, ஹீரோயினுக்கு நரம்பு ஊசி எனப்படும் Vein Injection போடுகிறாள்.

மெகா சீரியல்கள் அணுகுண்டுகளை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. வியாசரே வியக்கும் கதையமைப்பு மற்றும் கதா பாத்திரங்கள், சகுனியை மிஞ்சும் சூழ்ச்சி, துரியோதனனையே தூக்கி சாப்பிடும் வில்லத்தனம், ஷேக்ஸ்பியரின் யாகு, புரூடஸ் கதாபாத்திரங்களின் நயவஞ்சகங்கள் ஆகிய அனைத்து அம்சங்களும் சேர்ந்ததுதான் மெகா சீரியல்கள்.

இந்நிலையில், முன்னணி தொலைக்காட்சி ஒன்றில், மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஜவஹர் இயக்கும் இந்த சீரியலில், இன்று ஒளிபரப்பான எபிசோடில், ஹீரோயினான மீனாவை(வித்யா மோகன்) மர்ம நபர்கள் தாக்குகிறார்கள்.

இதில் அவருக்கு தலையில் காயமேற்பட, வீட்டிலிருக்கும் குட்டிப்பெண்ணான, பத்து வயது மதிக்கக்கூடிய அபி(ரியா மனோஜ்), மீனாவின் கணவரான டாக்டர் சிவாவுக்கு(அரவிந்த் ஆகாஷ்) வீடியோ காலில் தகவல் சொல்கிறார்வீடியோ கால் மூலமாகவே, டாக்டர் அந்த குட்டிப்பெண்ணை முதலுதவி செய்ய வைக்கிறார். இதுமுடிந்தவுடன் சிரெஞ்ச் எடுத்து, மருந்தை உறியச்சொல்லி, அதை ஹீரோயினின் கையில், நரம்பு ஊசியாக போட வைக்கிறார். மருத்துவர்கள் மத்தியில் இந்தக் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே, ஒரு சில பெண்கள், சிறுமிகள் தங்களை சித்தரித்து கொள்வதால் வீடுகளில் பிரச்சனை ஏற்படுவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தக் காட்சி அமைப்பு பற்றி, சென்னையில் உள்ள பிரபல மனநல மருத்துவர் ஜெயந்தினியினிடம் விளக்கம் கேட்டோம். “முதலில் கண்டனத்தை பதிவு செய்த அவர், எதற்குமே ஒரு வயதும், பயிற்சியும் தேவை. Intra Muscular(வழக்கமாக ஊசி போடும் முறை), Subcutaneous(இன்சுலின் போட்டுக்கொள்வது போன்ற முறை), Intravenous(நரம்பு ஊசி) என, இந்த முறைப்படிதான் டாக்டர்கள், செவிலியர்களுக்கே பயிற்சி தருவார்கள்.

சீரியலில் ஒளிபரப்பான இந்தக் காட்சி அமைப்பு, உளவியல் ரீதியாக சிறுவர், சிறுமிகளை ஊசிபோடத் தூண்டும். இதுபோன்ற காட்சிகளை பார்க்கும் சிறுவர், சிறுமிகள், தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சாதாரண முறையிலான ஊசியோ அல்லது நரம்பு ஊசி போட முயற்சிக்கலாம். பின்விளைவுகள் பற்றி அறிந்திருக்க முடியாத அவர்கள், ஏதாவது ஒரு மருந்தையோ அல்லது தண்ணீரையோ கூட ஊசி மூலமாக செலுத்திக் கொள்ளக்கூடும்.

அவ்வாறு செய்யும்போது, சிரெஞ்சியில் காற்று குமிழ்கள் இருந்தால், எம்பாலிசம் எனப்படும் தமனியில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுமட்டுமல்ல, மேலும் பல மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் ஏற்படலாம், எனவே இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்பவே கூடாதுஎன்று டாக்டர் ஜெயந்தினி திட்டவட்டமாகக் கூறினார்.

அதோடு நில்லாமல், இதுபோன்ற காட்சிகள் போதை ஊசிப் போடவும், போட்டுக்கொள்ளவும் தூண்டும் அபாயமும் இருக்கிறது. சீரியலை பார்த்து தூக்குப் போடுவது போல செய்து காட்டிய 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

இதுவரையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் போன்றவற்றை ஒளிபரப்பி வந்த சீரியல்கள், இப்போது மருத்துவத்துறையையும் விட்டுவைக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம், செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் சீரியல்களுக்கு, சென்ஸார் தேவை என்ற குரல்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry