கோயிலுக்குள் இளம் ஜோடிகள் முத்தம்! A Suitable Boy வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு! Netflix India-வை தடை செய்ய வலியுறுத்தல்!

0
29

OTT தளமான நெட் பிளிக்சின் A Suitable Boy என்ற web series பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. கோயிலுக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருப்பது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ, நெட் பிளிக்ஸ் உள்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள், வெப் சீரீஸ் எனப்படும் இணைய தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்தத் தொடர்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. அதேபோல், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதுதொடர்பான புகார்கள் அதிகமான நிலையில், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், நெட் பிளிக்சின் A Suitable Boy என்ற web series பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதில், மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை நதிக்கரையில் உள்ள ஸ்ரீமகேஸ்வர் கோயிலில், தன்யா மணிக்தலாவும், தனேஷ் ரஸ்வியும் முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.  மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, கோயிலில் முத்தக் காட்சிகளை எடுத்திருப்பது, லவ் ஜிஹாதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, நெட் பிளிக்ஸ் தளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் திவாரி, பாஜக தேசிய இளைஞரணி செயலாளர் கவுரவ் திவாரி ஆகியோர், மத்தியப் பிரதேச காவல்துறையில் புகார் அளித்தனர். இந்து பெண்ணுக்கு, இஸ்லாமிய இளைஞர், கோயிலில் முத்தம் கொடுப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ள திவாரி, நெட் பிளிக்ஸ், லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெட் பிளிக்ஸ் நிறுவனமும், A Suitable Boy வெப் சீரிஸ் குழுவும் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திவாரி அளித்த புகாரின் அடிப்படையில், Netflix Content பிரிவு துணைத் தலைவர் Monika Shergill மற்றும் Netflix பொதுக்கொள்கை பிரிவு இயக்குநர் Ambika Khurana ஆகியோர் மீது போலீஸார் எஃப்.. ஆர். பதிவு செய்துள்ளனர். இதனிடையே, நெட் பிளிக்ஸ் இந்தியாவை தடை செய்யக்கோரும் #BanNetflix என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

விக்ரம் சேத் நாவலை அடிப்படையாக வைத்து, மீரா நாயர் இந்த வெப் சீரிஸை இயக்கி உள்ளார். கடந்த மாதம் 23-ந் தேதி இது வெளியிடப்பட்டுள்ளது. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் ஆகிய படங்களை இயக்கியவர்தான் மீரா நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry