மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் தொழில் வளர்ச்சியைஅடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதில் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், மின்கட்டண உயர்வால் இந்த நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதுடன், முதலீடு வெளியேறுதல், வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மீண்டும் 2.18% உயர்த்தபட்டது. அதுமட்டுமின்றி, நிலையான கட்டணம்; காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை அதிக மின் பயன்பாட்டு நேரக் கட்டணம் என பல வழிகளில் மறைமுகமாகவும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் தமிழக அரசை எச்சரித்தன. பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வு சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறித்து சில உத்தரவாதங்களை தந்தது. அதில் தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது, “நிலைக்கட்டணம் ரூ.35 ரூபாயிலிருந்து 154 ரூபாயாக ஒரு கிலோவாட்டிற்கு உயர்த்தி உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தும், ரத்து செய்யப்படவில்லை. அதேபோல பீக் ஹவர் கட்டணம் 8 மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்த்தி உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் அந்த கோரிக்கையும் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை.
சோலார் தகடுகள் பொருத்தி அதன் மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 1 ரூபாய் 55 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதுவும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல் 12 கிலோ வாட்டிற்கு குறைவாக மின்சாரத்தை உபயோகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் டேரிஃப் 3Ib படி உள்ளது. அதனை 31 A விற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கையும் அரசாணையில் இடம்பெறவில்லை.” என்று தமிழ்நாடு தொழில் அமைப்பினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தொழில் அமைப்புகள் சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் நிறுவனங்களைச் சார்ந்த ஏறக்குறைய 3 கோடி தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வு தொழிற்சாலைகளையும், வணிக நிறுவனங்களையும் மட்டுமே மட்டுமே பாதிப்பது கிடையாது. தமிழகத்தின் பொருளாதாரத்தையும், மக்களையும், விவசாயத்தையும் கூட மிகக்கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.6000க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு குதிரைத் திறன் கொண்ட நீர் இறைக்கும் எந்திரத்தின் விலை, இப்போது ரூ.11,000. கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மின்சாரக் கட்டணத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்துவது நியாயமல்ல.” என்று கூறியிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry