தனியார்மயமாகும் சென்னை மாநகர பேருந்துகள்! சென்னையில் ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி!

0
209

MTC எனப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 29.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். 31 டிப்போக்கள் உள்ளன, 20,301 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், மொத்த செலவு ஒப்பந்தத்தின் அடிப்படைடில் (Gross Cost Contract), சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தில், ஆயிரம் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், பெருநகர போக்குவரத்துக் கழகத்தில், பேருந்துகளுடைய எண்ணிக்கை அதிகரிப்பதுடன், செயல் திறனும் மேம்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read : மாடல் பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணம்! கருணாநிதி கொள்கைகளுக்கு முரணானது என கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு கடந்த 06.12.2021 அன்று கையெழுத்திட்ட,” சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்” என்ற தலைப்பிலான ரூ.12,000 கோடி கடன் ஒப்பந்தத்தின் சில பிரிவுகள் தான் இதற்கு மூலதனம்.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும். புதிய பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனர், நடத்துனர்கள் தான் இயக்குவர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய சென்னை நகர கூட்டாண்மையின் கீழ் வரும் சென்னை நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) ஒரு பகுதியாக, இந்த ஆண்டுக்குள் 500 தனியார் பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளன. 2025ம் ஆண்டுக்குள் மேலும் 500 தனியார் பேருந்துகள் பெருநகர போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்படும்.

Also Read : அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெருநகர போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரி ஒருவர், ‘போக்குவரத்து கட்டமைப்பு, வருவாயை திரட்டுவது ஆகியவை மாநில போக்குவரத்து நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம், கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை பேருந்தை இயக்கும் தனியார்களின் பொறுப்பாகும். பயணிகளுக்கான சேவையின் தரத்தை, மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்யும். பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் பணம் வழங்கப்படும்’ என்று கூறினார். பொது பேருந்து சேவை வழங்கும் தனியாரை தேர்ந்தெடுப்பதற்காக Transaction Advisor என்ற ஆலோசகரை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, சேவைகளின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிப்பு ஆகியவை பயணிகளுக்கு உதவுவதாக இருந்தாலும், சென்னையில் தனியாரால் இயக்கப்படும் பேருந்துகளில், பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். மாநிலத்தின் பிற நகரங்களில் தனியாரால் இயக்கப்படும் டவுன் பஸ்களில், பெண்கள் அல்லது மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Also Read : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு! மார்ச் 17ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

பெருநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் நடவடிக்கைக்கு இடதுசாரி தொழிற்சங்கமான சிஐடியு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிஐடியுவின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகம் நயினார் இதுபற்றி கூறும்போது, “ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைக்கு தங்களது தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது பின்வாசல் வழியாக போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாகும். பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய சென்னை பெருநகர போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை வாங்கி, உரிய பணியாளர்கள் மூலம் இயக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வரும் 8ம் தேதி சென்னையில் பல்லவன் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். அத்தகைய சூழலில் அந்த பேருந்துகளுக்கான ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும். அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை.

Also Read : மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!

தமிழக அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, இனி வரும் காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது; புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

மொத்த செலவு ஒப்பந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் புதிய பேருந்துகள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது; ஊதியச் செலவுகள் குறையும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. தொடக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவு குறைவது போலவும், தனியாரின் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் கட்டுப்படுத்துவது போலவும் தோன்றும். ஒரு கால கட்டத்தில் நேரடி அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து, தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனியார் பேருந்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry