கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

0
562
Edappadi Palaniswami subjected to toxic politics by Murasoli

4 Min(s) Read: ’ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்தத் துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை’ என்று கதறினார்கள் எக்கியார்குப்பம் கிராம மக்கள். பொம்மை முதலமைச்சர் தலைமையிலான திராவக அரசின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மறைக்க, மடைமாற்ற முரசொலி விஷம அரசியலை செய்கிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 23 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் கண்பார்வை இழந்தும், உடல் உறுப்புகள் செயலிழந்தும் அவதிப்படுகின்றனர். மனிதாபிமானமற்ற இந்தக் கொடூரத்தைக் கண்டித்தால், பொம்மை முதலமைச்சரின் மனம் நோகிடுமோ என, மயிலிறகால் வருடுகின்றன கூட்டணிக் கட்சிகள். (மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் 15 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 8 பேர்)

Also Read: இலை, தழைகளை கட்டிவிட்டு ஆசிரியைகளை நடனமாட வைத்ததால் சர்ச்சை! பள்ளிக் கல்வித்துறை செயலுக்கு குவியும் கண்டனங்கள்!

மக்களுக்கான ஆட்சி நடத்திய மக்கள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, கள்ளச்சாராய மரணத்திற்குப் பொறுப்பேற்று திராவக அரசின் முதலமைச்சர் ராஜினாமா செய்தாக வேண்டும் என்கிறார். ராஜினாமா செய்துவிட்டு, இரண்டே ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு செய்த கணக்கிலடங்கா பாவங்களுக்குப் பரிகாரம் தேடி, தனது மனைவியுடன் கோவில் கோவிலாகச் செல்லலாம். ஏனென்றால், கொலைகாரனுக்கே நிவாரணம் தந்தவராயிற்றே?

தனது தலைவனைப் போன்றே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியும் பொம்மையாக இருப்பார் என்று, பொய்யை மையாகப் போட்டு எழுதும் முரசொலி நினைத்துவிட்டதுபோலும். கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது, கள்ளச்சாராயம் மற்றும் போலி மது குடித்து 23 பேர் இறக்கிறார்கள்; தஞ்சையில் பாரில் மதுவாங்கிக் குடித்த 2 பேர் உயிரிழந்தார்கள். அதை தற்கொலை என்று மூடி மறைக்க எத்தனிக்கிறது திராவக அரசு. அத்தியாவசியப் பொருள் போல கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை நடக்கிறது; கொலை – கொள்ளை சர்வ சாதாரணமாகிவிட்டது; சமூக நீதி புதைகுழிக்குப் போய்விட்டது; நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிக்கிறது; இந்த அவலத்தை மக்கள் மன்றத்தில் வைத்து, நடவடிக்கை கேட்டால் எடப்பாடியார் மீது விழுந்து பிராண்டுகிறது முரசொலி.

Also Read : தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது! திமுகவின் கைக்கூலிகளாக மாறிய சமூகப் போராளிகள், நடிகர்கள்! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

1998ல் திமுக ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 46 பேர் கள்ளச்சாராயத்துக்கு பலியானார்கள், 100க்கும் அதிகமானோர் பார்வை இழந்தனர். 2008ல் திமுக ஆட்சியில் அதே மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 14 பேர் பலியாகினார். டாஸ்மாக் மூடக்கோரி கடந்த ஆட்சியில் கறுப்புச் சட்டை அணிந்து கையில் பதாகையுடன் நின்றார் இந்த பொம்மை முதலமைச்சர். டாஸ்மாக்கை மூடி, கள்ளச்சாரயத்தை, மெத்தனால் சாராயத்தை ஒழிக்க முடிந்ததா விஷம அரசியல் செய்யும் இந்த திராவக அரசால்? சமூகப் போராளிகள் என்ற போர்வையில் அதிமுக ஆட்சியில் தினமும் போராட்டம் நடத்திய, சமூகத்துக்குக் கேடானா கோமாளிகள் எங்கே போனார்கள்?

கொரோனா முழு ஊரடங்கின்போது மது அடிமைகள் சிலர் லிப் ஸ்டிக், தின்னர், சானிடைசர் குடித்து இறந்த சம்பவத்தை, தற்போதைய கள்ளச்சாராய சாவுடன் இணைத்து, போக்குக் காட்டி தப்பிக்கப் பார்க்கிறது திமுகவும் முரசொலியும். 2022 – 2023ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலே, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையால், கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளே இல்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளாரே. அப்படியானால் பொய்யை அவிழ்த்துவிடுவது முரசொலியா? செந்தில்பாலாஜியா?

Also Read : மே தினக் கூட்டத்தில் முதலமைச்சரின் கார்ப்பரேட் தொனியிலான பேச்சு! மசோதா கொண்டுவந்தது அசாத்திய துணிச்சலா? அசட்டுத் துணிச்சலா?

கஞ்சா விற்பவர்களை பிடிப்பதாக ‘ஓ’ போடும் டிஜிபி, விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள பெருக்கரணை, பேரம்பாக்கத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, மனிதர்கள் அருந்தக்கூடாத விஷச் சாராயம் என்ற சிலிர்க்க வைக்கும் விளக்கத்தைக் கொடுத்தார். அப்படியானால், கள்ளச்சாராயம் விற்கலாம், அதை மக்கள் குடிக்கலாம் என்று டிஜிபி பரிந்துரை செய்கிறாரா?

உயிரிழப்புகளுக்கு காரணம் விஷச்சாராயம் என்றால், அதை மனிதர்களுக்கு கிடைக்கச் செய்தது யார்? போலீஸாருக்கு தெரியாமல்தான் 2 ஆண்டுகளாக மெத்தனால் சாராயம் விற்கப்பட்டதா? இன்னும் விற்கப்படுகிறதா? எக்கியார்குப்பத்தில் பாக்கெட்டில் அடைத்து சாராயம் விற்கப்பட்டுள்ளது.
ஆனால், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் டாஸ்மாக் போலி லேபிளுடன், ‘தமிழ்நாட்டில் மட்டும் விற்பனைக்கானது’ என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு பாட்டில்களில் விற்கப்பட்டுள்ளது. இது போலி மதுதானே? டாஸ்மாக் பெயரில் இதை தயாரித்து விற்பது யார்? பொம்மை முதல்வரின் பாணியில் சொன்னால், இதைப்பற்றியெல்லாம் பேச, முரசொலிக்கு தெம்போ, திராணியோ இருக்கிறதா?

Also Read : கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலி வேலை செய்வதா திராவிட மாடல்? காவியைப் பார்த்து காப்பி அடிக்கலாமா? நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆவேசம்!

“தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 28 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது; 4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது; கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது; நடப்பாண்டில் இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு, 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். கடந்த ஆண்டு 37,217 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நான்கே மாதத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது”

இப்படியொரு புள்ளிவிவரத்தைக் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வேட்டை நடத்தினோம் என்று பூரிக்கிறார் காவல்துறை தலைவர். கொள்ளிக்கட்டையை எடுத்து டிஜிபி தலையை சொறிந்துகொண்டிருக்கிறார். இதைப்பற்றி ஆளுநர் அறிக்கை கேட்டிருக்கிறார். கள்ளச்சாராய விற்பனையின் முக்கிய சூத்திரதாரியான திமுக பிரமுகர், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவராக உள்ளார். இருவரும் கேக் ஊட்டிக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடனேயே கள்ளச்சாராயம், மெத்தனால் சாராயம் எளிதாக விற்கப்படுவது உறுதியாகிறது.

Also Read : தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

2.55 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டதாக கணக்கிலேயே காட்டியுள்ளார்கள். அப்படியானால், கள்ளச்சாராயம் ஆறுபோல ஓடுகிறது என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் குற்றச்சாட்டு உண்மைதானே? முரசொலி பாணியில் சொன்னால், ‘இதைக் கட்டுப்படுத்தத் தவறிய பொம்மை முதல்வருக்குத்தானே அறிவுக் கட்டை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயமே இல்லை என்று சொன்னால்; என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கும் பொம்மை முதல்வருக்குத்தானே நினைவாற்றல் சூனியம்’. மெத்தனால் சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த அரசு திராவக அரசதானே?

23 உயிர்களைப் பலி வாங்கிய சம்பவத்தில், துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இதுவரை வாய்திறக்கவில்லை. கள விசாரணைக்காவது அமைச்சர் சென்றாரா? என்றால் இல்லை. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஒரு புறம் இருந்தாலும், இந்த விவகாரத்தில் அவர் பேசு பொருளாகவோ, விமர்சனத்திற்குள்ளோ சிக்கிவிடக்கூடாது என்பதில் பொம்மை முதலமைச்சர் இவ்வளவு அக்கறை காட்டுவதன் பின்னணி என்ன?

Also Watch : நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal

தமிழகத்தை 7 மண்டலங்களாகப் பிரித்து, மெத்தனால் சாராயம் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஒரு சிலரை கைது செய்துவிட்டு, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மீது மட்டும் விடியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட அதிகார மையங்கள் முழு முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மதுவிலக்குப் பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததன் பின்னணி என்ன? காவல்துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? இதையெல்லாம் மக்கள் பேசக்கூடாது, பாதிக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் பிரச்சனை செய்துவிடக்கூடாது, அப்படிச் செய்தால் முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என்ற காரணத்தினாலேயே ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

அரசின் இயலாமையால் அல்லது சட்டவிரோதச் செயலுக்கு துணை போனதால் பலியான 23 உயிர்களுக்கு, திராவக அரசின் பொம்மை முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்துவிட்டால் போதுமா? 60க்கும் மேற்பட்டோர் கண்பார்வை இழந்தும், உடல் உறுப்புகள் செயலிழந்தும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் எம்மாத்திரம்? பார்வையிழந்தவர்கள், கிட்னி பாதிக்கப்பட்டவர்களால் இனி என்ன செய்ய முடியும்? அவர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள். இந்த நிலைக்கு திராவக அரசுதானே காரணம்.

எக்கியார்குப்பம் மக்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வேலைக்குச் செல்லாததால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தலைமையில், திண்டிவனம் நகர அதிமுகவினர் 550 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் ஆய்வு செய்த மாவட்டத்தில், ஒரே மாதத்தில், கள்ளச்சாராயம் பல உயிர்களை பலிவாங்கியிருக்கிறது; ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. மக்கள் முதலமைச்சர் எடப்பாடியாரை பொறுத்தவரை, திமுக ஒரு தம்பலப்பூச்சி. முரசொலியும், கொலைகாரனுக்கே நிவாரணம் அளித்த கோமாளிகளும் அதை மறந்துவிட வேண்டாம்.

கட்டுரையாளர் – ‘அம்மா’ கோபி, ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry