முதலமைச்சர் நாராயணசாமியின் அடுத்தடுத்த சறுக்கல்களால், புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் நமசிவாயத்தை சுற்றி மையம் கொண்டுள்ளது. அவரது நகர்வுகள், புதுச்சேரி அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, டெல்லி தலைவர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
2016-ம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தல் முடிந்து நமசிவாயம் ஏமாற்றப்பட்டதும், முதலமைச்சராக நாராயணசாமி பொறுப்பேற்றதும் அனைவருக்கும் தெரியும். மகிழ்ச்சியாக முதலமைச்சர் சீட்டில் அமர்ந்த நாராயணசாமிக்கு, கிரண்பேடி உருவில் தொடங்கிய குடைச்சல் இன்னுமும் நீடிக்கிறது. எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில், ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்பைத் துடைக்க, ஆளுநரை கைகாட்டினார் நாராணசாமி. ஆனால், ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி, தனக்கு தேவையானவற்றை செய்து முடித்துக்கொண்டது பற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
Also Read : தனக்கு தேவையானபோது மட்டும் ஆளுநரின் தடைகளை தகர்க்கும் முதல்வர்! கிரண்பேடியை வீழ்த்திய பட்டியலுடன் ஓர் அலசல்!
பிசுபிசுத்த போராட்டம்
ஆளுநருக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை அறிவித்த நாராயணசாமி, நான்கு நாட்கள் தொடர் தர்ணா என அறிவித்து, அண்ணா சிலை அருகே கடந்த 8-ந் தேதி போராட்டம் தொடங்கினார். திமுக முற்றிலுமாக தவிர்க்க, நமசிவாயம் முதல்நாள் மட்டும் வந்தார். கடட்சியினரும் போதிய ஆதரவு தராத நிலையில், மூன்றாவது நாளே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, படுக்கைகளுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினார் நாராயணசாமி.
போராட்டத்தின் மூலம் கிரண்பேடியை மாற்றிவிட்டாலும், அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் அரசால் நிறைவேற்றிவிட முடியுமா? என்ற கேள்வியுடன், மாநில திமுக அமைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சிவா வெளியிட்ட அனல் கக்கும் அறிக்கை, நாராயணசாமியை அதிரவைத்தது.
நமசிவாயத்தின் நெக்ஸ்ட் மூவ்
2011-ல் ரங்கசாமியை சுற்றியே புதுச்சேரி அரசியல் நகர்வுகள் இருந்தன. பின் 2016-ல், காங்கிரஸ் கூட்டணி, குறிப்பாக நமசிவாயம் லைம் லைட்டில் இருந்தார். தற்போது 2021 தேர்தலில் புதுச்சேரி அரசியல் தலைவர்களின் ஒட்டுமொத்த கவனமும் நமசிவாயத்தின் மீதுதான் குவிந்திருக்கிறது. நமசிவாயம் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது பற்றிய விவாதமும் அனல் பறக்கிறது. அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, “நாராயணசாமியின் முதல் நாள் போராட்டத்தில் பெயரளவில் கலந்துகொண்ட நமசிவாயம், மறுநாள், டெல்லியில் அமித் ஷா–வை சந்தித்துள்ளார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் இணைந்து பயணிக்க நான்கு எம்.எல்.ஏ.க்கள் தாயாரக இருக்கின்றனர். எனவே, வரும் தேர்தலில், நமசிவாயம் தாமரையை கையில் ஏந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கு நமசிவாயம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொறுப்பாகமாட்டார். கட்சிக்காக எவ்வளவோ அவர் பொறுத்துக்கொண்டார். தனிப்பட்ட செல்வாக்குடன் கட்சியில் தலைவர்கள் இருப்பதை காங்கிரஸ் தலைமை விரும்புவதில்லை. எனவேதான் நமசிவாயம் கட்சியில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில்தான், அவர் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்” என்கின்றனர்.
நமசிவாயம் பாஜக–வுக்குச் சென்றாலும், தனிப்பட்ட செல்வாக்கால், புதுச்சேரி அரசியல் களத்தை தமக்கு சாதகமாக மாற்றுவார் எனத் தெரிகிறது. ரங்கசாமி, நாராயணசாமி ஆகியோரது ஆட்சி அதிகாரத்தின் செயல்பாடுகளை உணர்ந்துள்ள நிலையில், நமசிவாயத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதேபோன்று, அவர் சார்ந்த வன்னியர் சமூக மக்களும், கட்சியைத் தாண்டி நமசிவாயத்தை ஆதரிப்பதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவே தெரிகிறது.
திமுக–வை சமாதானப்படுத்துவதிலும் தோல்வி
ஏற்கனவே காங்கிரஸ் அரசு மீதும், நாராயணசாமி செயல்பாட்டின் மீதும் கடுமையான அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள், காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டனர். இதை திமுக தலைமையும் ஏற்றுக்கொண்டுவிட்டது. பல வழியில் சமாதானப்படுத்த முயன்றும், இந்த விஷயத்திலும் நாராயணசாமிக்கு வெற்றி கிடைக்கவில்லை. போராட்டம் குறித்த சிவா எம்.எல்.ஏ–வின் அறிக்கை இதை உணர்த்துகிறது. எனவே, வரும் தேர்தலில் என்.ஆர். காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைப்பது சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. தேர்தல் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வசம் ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின்.
நாராயணசாமிக்கு அதிகரிக்கும் குடைச்சல்
நாராயணசாமியின் பாராமுகத்தால், ஜான்குமார் எம்.எல்.ஏ.வும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதன் வெளிப்பாடாக, புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளரை அவர் சந்தித்தார். எனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் (நமசிவாயம் உள்பட) எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது. ஆட்சிக் கவிழ்ப்பு உறுதியானால், தன்னுடன் மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க நாராயணசாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஆளுநர் ஆட்சி அமையக்கூடும்.
கூட்டணி எப்படி இருக்கும்?
நமசிவாயத்தை சுற்றியே அரசியல் நகர்வுகள் இருப்பதால், பாஜக, அதிமுக, பாமக, மதிமுக ஒரு அணியாக களம் காணலாம். என்.ஆர். காங்கிரஸ், திமுக, விசிக இணைந்து தேர்தலை சந்திக்கும். காங்கிரஸ் தனிமரமாகத் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry