சம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள்! சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி!

0
245

பெரும் தொழிலதிபரான எஸ். வைகுண்டராஜனுக்கும், அவரது சகோதரர் எஸ். ஜெகதீசனுக்கும் இடையேயான சொத்துப் பிரச்னையால், அவர்களது குழும ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இயங்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

விவி மினரல்ஸ், அதன் துணை நிறுவனங்கள் உள்பட பல தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவியர் வைகுண்டராஜன். தாது மணல் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிறுவனங்களில், விவி மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக வைகுண்டராஜன் இருந்து வருகிறார்.

இவரது தம்பி ஜெகதீசன், இணை மேலாண் இயக்குநராக இருக்கிறார்.  வைகுண்டராஜன் மகன்கள் சுப்பிரமணி, வேல்முருகன் மற்றும் ஜெகதீசனின் மகன்கள் முத்துராஜன், செந்தில்ராஜன், சுப்புராஜன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். அதிமுக விசுவாசியான வைகுண்டராஜன், சொத்துகளை காப்பாற்றிக்கொள்ளவும், செல்வாக்கை நிலைநாட்டவும் 2014-ம் ஆண்டு Alliance Broadcasting நிறுவனம் சார்பில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை தொடங்கினார்.

இதனிடையே, தாது மணல் எடுத்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 2 ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டராஜன், ஜெகதீசன் உள்ளிட்டோர் தொடர்புள்ள சுமார் 100 இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்ததுஇதற்குப் பிறகு அந்தக் குழுமத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. கரன்சி புழக்கம் வெகுவாகக் குறைந்த நிலையில், சொத்து வாங்கியதில், அண்ணன், தம்பிக்கு இடையே பகை மூண்டது. ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் சொத்து வாங்கினார்கள் என்பதே பிரச்னைக்கு காரணமாக சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து சொத்து பிரிப்பதில் வைகுண்டராஜன், ஜெகதீசன் இடையே பெரும் பிரச்னை உருவானது. ஒருகட்டத்தில், வைகுண்டராஜன் குடும்பம் கொலைமிரட்டல் விடுப்பதாக, நெல்லை எஸ்.பி.யிடம் ஜெகதீசன் புகார் அளித்தார். மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வைகுண்டராஜன் ஆட்கள் புகுந்து சேதம் செய்வதாக, தூத்துக்குடி எஸ்.பி.யிடமும் ஜெகதீசன் புகார் அளித்திருந்தார்.  சொத்துப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது

இவ்வாறு இவர்களுக்கு இடையேயான சொத்து பிரச்னை விஸ்வரூபம் எடுக்க, நிறுவனங்களின் ஊழியர்கள் படாதபாடுபடுகின்றனர். குறிப்பாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்நத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை நிர்வாக அலுவல்களை வைகுண்டராஜன் மகன் சுப்பிரமணியும், டெக்னிக்கல் விவகாரங்களை ஜெகதீசன் மகன் முத்துராஜனும் கவனித்து வருகிறார்கள். இவர் டெக்னிக்கல் விவகாரங்களை நன்கறிந்தவர் என்று தெரிகிறது.

தொலைக்காட்சி உரிமம், தொழில்நுட்ப கருவிகள் என அனைத்துமே முத்துராஜன் பெயரில்தான் இருக்கிறது. அதேபோன்று, தொலைக்காட்சியின் வெப்சைட், யு டியூப் கணக்கும் அவர் பெயரில்தான் உள்ளது. எனவே, சுப்பிரமணி, நியூஸ் 7 பிரைம் என்ற யு டியூப் சேனலை தொடங்கி அதிலும் நிகழ்ச்சிகளை பகிர்ந்து வருகிறார். அதாவது சட்ட ரீதியாக, முத்துராஜன், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு உரிமை கோரும் அதிகாரம் பெற்றுள்ளார். சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது முதல், நியூஸ் 7 ஊழியர்களுக்கு சம்பள பிரச்னை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஊதியத்துக்கான தொகையை யார் கொடுப்பது என்பதில், சுப்பிரமணி, முத்துராஜன் இடையே மோதல் நிலவுகிறது. எனவே Alliance Broadcasting பெயரில் வரும் விளம்பர வருவாயைக் கொண்டு ஊழியர்களுக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை அடுத்து, ஆட்குறைப்பு செய்யலாம் என உயர்மட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், சுப்பிரமணி இதை ஏற்க மறுத்துள்ளார். வெளியேற்றப்படும் நிர்வாகிகள் முத்துராஜனுக்கு ஆதரவாக செயல்பட்டால், புது சிக்கல் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே, சேனல் வேண்டுமா, வேண்டாமா என்பதை யார், எப்போது முடிவெடுப்பார்கள்? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சொத்துகளை காப்பாற்றுவதற்காக தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சொத்துக்கே பிரச்சினை என்பதால், நியூஸ் 7 தொலைக்காட்சி ஊழியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 மாத சம்பள பாக்கி உள்ள நிலையில், இந்த நிலை எத்தனை மாதம் நீடிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பல ஆயிரம் கோடி சொத்துப் பிரச்னை என்பதால், நீதிமன்றத்தில் எப்போது வழக்கு முடிவது, தங்களுக்கு எப்போது சம்பளம் முறையாக கிடைப்பது என்று அவர்கள் வேதனையில் உள்ளனர். அதேநேரம், சுப்பிரமணி, முத்துராஜன் ஆகியோர், ஆளுக்கொரு தொலைக்காட்சியை தொடங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry