அம்மாவின் அடையாளத்தை மறைக்க முயற்சிப்பதா? சசிகலாவுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக-வினர்!

0
22

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளத்தை இருட்டடிப்பு செய்யும்  முயற்சியில் சசிகலா இறங்கியிருப்பதாக அதிமுகவினர் ஆதங்கப்படுகின்றனர். அம்மா மறைந்தாலும், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமானது என நாங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், கட்சியிலேயே இல்லாத சசிகலா தன்னை நிரந்தர பொதுச்செயலாளர் என எப்படி கூறிக்கொள்ள முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுகவை கைப்பற்றுவதற்கான சசிகலாவின் முயற்சிகள் சறுக்கலியேயே முடிகிறது. சிறையிலிருந்து வெளிவந்த அவர், அதே சூட்டோடு தீவிர அரசியல் இறங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அரசியல் துறவறம் பேணுவதாக அறிவித்தார். பிறகு தொண்டர்களுடன் பேசிய ஆடியோவை சசிகலா வெளியிட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்தபிறகு அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

விவேக், டாக்டர் வெங்கடேஷ் மேற்பார்வையில்,  டிடிவி தினகரன் இல்லாமல், கடந்த 16-ந் தேதி, சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்வதற்கான பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறிவுரைக்கு ஏற்ப, ‘புரட்சித் தாய் சின்னம்மா’ என்ற புதிய அடைமொழி சசிகலாவுக்கு உருவாக்கப்பட்டது. 16-ந் தேதி தி.நகர் வீட்டில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட சசிகலாவை, வழியில் தொண்டர்கள் வரவேற்கவில்லை. மெரினாவிலும் 3 ஆயிரத்துக்கும் குறைவாகவே தொண்டர்கள் கூடியிருந்தனர்.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு புறப்பட்டுவிட்டார். அடுத்த நாள் தி.நகர் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்ற சசிகலா, தனது பெயரோடு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்புடன் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்துவைத்தார். பிறகு ராமாபுரம் தோட்டத்துக்கும் அவர் சென்றார். முன்னதாக பொன்விழா கூட்டத்தில் பேசிய சசிகலா,தமிழகத்தில் கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும், அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும், நாம் ஒன்றாக வேண்டும்என்று பேசினார்.

திமுகவுக்கு வலுவான களத்தை சசிகலா அமைத்துக் கொடுக்கிறாரே என்ற புலம்பலுடன் கடந்து சென்ற அதிமுகவினருக்கு, பொன்விழா கூட்டத்தில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. இதுதொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்திய அதிமுகவினர் சிலர், “கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றால் அது அம்மா மட்டும்தான். அம்மா அலங்கரித்த பதவி அது, அம்மா இருக்கும்போதே நாங்கள் அவரை அப்படித்தான் அழைப்போம். அதனால்தான், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கினார்கள்.

சசிகலா தன்னை நிரந்தர பொதுச்செயலாளர் என அழைத்துக்கொள்வது, அம்மாவின் அடையாளத்தை மறைக்க, அவர் முயற்சிக்கிறார் என்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். வரும்காலங்களில் அம்மாவை அவர் இருட்டடிப்பு செய்வார் என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் அவரது முயற்சி தோல்வியில்தான் முடியும். இப்போது கட்சி முடிவுகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிதான் எடுக்கிறார். ஓபிஎஸ் சசிகலா பக்கம் போனாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. திமுகவில் மு..அழகிரி போல, அதிமுகவில் சசிகலா என்பதாகவே முடிவு இருக்கும்என்று கொட்டித் தீர்த்தார்கள்.     

இவ்வாறான புகைச்சல்களுக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது, தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும், மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்என்று கூறியுள்ளார்.

சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று அழைத்துக் கொண்டாலும், அதை ஏற்று, அவரது தீவிர அரசியல் பிரவேசத்தை தீர்மானிக்கப்போவது டெல்லி பாஜக தலைமைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சசிகலாவுக்கு அதிமுகவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &