பிரச்சனையை மறக்கடிக்க ஆஃபர் தரும் Zomato? தமிழர்கள் குறித்து கேவலமான மதிப்பீடு! எது முக்கியம், சோமாட்டோவா? இன உணர்வா?

0
23

மொழிப் பிரச்சனையை கிளப்பிவிட்ட சோமாட்டோ, அதனை மறக்கடிப்பதற்காக கவர்ச்சிகர ஆஃபர்களை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், Zomatoவுக்கு எதிரான வினையாற்றல்களுக்கு பதிலளித்துள்ள அந்நிறுவன சிஇஓ, இது தேசியப் பிரச்சனையா? என கேட்டுள்ளார்.

Deepinder Goyal

பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட, டெல்லியில் வசிக்கும் தீபிந்தர் கோயல், பங்கஜ் சட்டா என்பவர்களால் 2008-ல் Foodiebay என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான், 2011-ல் Zomato என மாறியது. இந்நிறுவனம் 24 நாடுகளில், 10000 நகரங்களில் செயல்படுகிறது. தற்போது தீபிந்தர் கோயல்(38) சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர், சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு வராததால், வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை என்று சோமாட்டோ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் சோமாட்டோ செயல்படும் பட்சத்தில், தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என்று விகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் பதிலளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலை விகாஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை அடுத்து, சோமாட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ட்விட்டரில்  #Reject_Zomato, #ZomatoSpeakTamil உட்பட பல ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. “தேசிய மொழி” கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்க வில்லை.

இதனால், சோமாட்டோவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் எதிர்வினையாற்றினார்கள். இன உணர்வுள்ள வாடிக்கையாளர்கள் பலர் சோமாட்டோ செயலியை தங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்து நீக்கினார்கள். இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

இந்நிலையில்  இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கூறிய ஊழியரை சோமேட்டோ நிர்வாகம்  பணிநீக்கம் செய்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம்.  வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம் . பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்.  மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக் கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கி உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம் என அந்நிறுவனம் கூறிய நிலையில், சம்மந்தப்பட்ட ஊழியரை சீ.இ.ஓ. தீபிந்தர் கோயல் மீண்டும் பணியில் சேர்த்துள்ளார். அத்துடன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஊழியர் ஒருவரின் அறியாமையால் பிழை ஏற்பட்டிருக்கிறது. இது தேசியப் பிரச்சனையா? சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார். இதைத்தான் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும். நிர்வாக நடைமுறையாகவே சோமாட்டோ வருத்தக் கடிதம் வெளியிட்டுள்ளது.

இதனூடே, பிரச்சனையை மறக்கடிக்க அல்லது நீர்த்துப்போகச் செய்ய, சிறப்பு சலுகைகளை வழங்க சோமாட்டோ ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இலவசங்களுக்கு அல்லது சிறப்பு ஆஃபர்களுக்கு மயங்குபவர்கள் தமிழர்கள் என்ற அந்நிறுவனத்தில் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாகவே இது உள்ளது. எனவே, தமிழர்கள் என்ற இன உணர்வை நிலைநாட்ட, சோமாட்டா நிறுவனத்தின் ஆஃபர் மட்டுமல்ல, அந்நிறுவனத்தையே நிராகரிப்பதுதான் சரியானதாக இருக்கும். தீபிந்தர் கோயலின் டிவிட்டர் பதிவே இதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டது.

சோமாட்டோ மட்டுமல்ல, தமிழ்நாட்டில், வங்கி, செல்ஃபோன் என சேவைத்துறையில் உள்ள பல நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவை மையத்தில், தமிழ் தெரிந்த ஊழியரை பணியமர்த்துவது இல்லை. இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டை சம்பாதிப்பதற்கான ஒரு களமாகவே பார்க்கிறது. தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் அவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அல்லது குறைகளை காது கொடுத்து கேட்கக்கூடத் தயாராக இல்லை. இதுபோன்ற நிறுவனங்களை சர்வ நிச்சயமாக நிராகரித்தால் மட்டுமே, நமக்கு பரிபூரண சேவை கிடைக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry