உள்ளே வாங்க, நல்லா அழுங்க! இப்படியொரு விளம்பரம் ஸ்பெய்னில் கவனத்தை ஈர்த்துள்ளது. அழுகையை அடக்காமல், அழுதுத் தீர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அறையை ஏற்படுத்தியதன் நோக்கமாகும்.
மனிதர்களில் சிலர் துக்கம், சந்தோசம், அழுகை, கோபம் என அனைத்து உணர்வுகளையும் வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கு மகிழ்ச்சி வந்தால் மட்டும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டுவிட்டு, சோகத்தை பகிர்ந்துக் கொள்ள தயங்குவார்கள்.
ஒரு சிலரோ எதையுமே யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக தங்களுக்கென தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதில் ஒரு சிலர் தங்களுக்கு நினைத்தவற்றை பேச முடியாமல் மனதிலேயே வைத்து கொண்டு இருப்பார்கள்.
இதுபோன்றவர்களுக்கு நாளாடைவில் மன அழுத்தமும், மன இறுக்கமும் ஏற்பட்டு, அதனால் பல தவறான எண்ணங்களும் தோன்ற வாய்ப்புள்ளது. அழுகையை அடக்க அடக்க மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். எனவே, கவலை இருந்தால் கண்ணீர் விட்டு அழ வேண்டும்‘ என மனநல மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இம்மதிரியாக இருக்கும் மக்களுக்கு ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ‘அழுகை அறை‘ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களுக்காகவும் ஸ்பெயினில் தனி அறையை உருவாக்கி உள்ளனர். ‘அழுகை அறைக்கு வரவேற்கிறோம்‘ என, வினோத வாசகத்துடன் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள அந்த அழுகை அறை வரவேற்கிறது. மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த அழுகை அறைக்கு மன அழுத்தம் இருக்கும் மக்களும் அல்லது தாங்கள் யாரிடமாவது மனதில் இருப்பதை தெரிவிக்க வேண்டும் என்று விரும்பும் மக்களும் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தட்டுள்ளது. இங்கு வருகைதரும் மக்கள், தாங்கள் யாரிடம் மனம்விட்டு அழவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசலாம் அல்லது உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்கலாம்.
மனதில் கவலை உள்ள பலரும் இந்த அறைக்கு வந்து அழுது ஆறுதல் தேடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த அழுகை அறையின் முக்கியத்துவம் பற்றி கூறும் மருத்துவர்கள், இன்றைய காலகட்டத்தில் மக்கள் மனம் விட்டுப் பேசக்கூட ஆள் இல்லாமல் உள்ளனர். அவ்வாறு இருப்பவர்கள் மனதளவில் ஏக்கம் கொண்டு, அந்த ஏக்கம் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. அதற்காகவே உளவியல் நிபுணர்களுடன் சேர்ந்து இந்த அழுகை அறை உருவாக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry