வடகிழக்குப் பருவமழை வரும் 26-ல் தொடங்க வாய்ப்பு! தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம்!

0
149

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக பெய்துள்ள நிலையில், வரும் 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையாகும். இந்த பருவமழை வட மாநிலங்களில் அதிகளவு பெய்யும். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டுமே தென்மேற்கு பருவமழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிகளவு கிடைக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த பருவ மழையை நம்பியே உள்ளனர். மேலும் தமிழகத்தின் குடிநீர் தேவையையும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பூர்த்தியாகும்.

இந்த வருடம் இயல்பை விட அதிகளவு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் குறைவான மழை பொழிவு இருந்தாலும் தொடர்ந்து வந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் விலகினாலும், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

File Image

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கில் வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

Representational Image

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது. எனவே தென் இந்திய பகுதிகளில் வருகிற 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 33 செ.மீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 39 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும். சென்னை மாவட்டத்தில் 46 செ.மீட்டர் இயல்பான மழை பெய்ய வேண்டும். ஆனால் 50 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் அதிகமாகும். இந்த பருவமழை ஜூலை மாதத்தில் அதிகமாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை என்றால் என்ன?

தென்மேற்கு பருவக் காலங்களில் ஏற்படக்குடிய காற்று இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கும். இதன் காரணமாக, வட பகுதியில் காற்றின் அடர்த்தி அதிகமாககும், அப்போது காற்று அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளில் அந்த ஈரக்காற்று வீசத்தொடங்கும். இந்த காற்று வடகிழக்கு திசையில் வீசுவதால் வடகிழக்குப் பருவ காற்று என்கிறோம். வடகிழக்கு பருவ காற்றால் ஏற்படக் கூடிய மழை வடகிழக்குப் பருவமழை ஆகும்.

பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம் ஆகும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இருக்கும்.  குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில், நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும். வடகிழக்குப் பருவமழை, தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நீடிக்கும்.  வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஆந்திரா, தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகளில் மழை பொழிவு இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &