Odisha Train Accident: 280க்கும் அதிகமானோரை பலிகொண்ட கோரமான ரயில் விபத்து! தமிழர்கள் 35 பேர் பலியானதாக தகவல்!

0
86
Odisha Train Accident: The Railways Ministry has ordered a probe.

இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட இந்த கோர விபத்து, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கிறது.

விபத்து நிகழ்ந்தது எப்படி?

  • * நேற்று மாலை 3.20-க்கு ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
    * நேற்று மாலை 6.30 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் வந்தடைந்தது.
    * அங்கு 5 நிமிடங்கள் நின்ற பிறகு மீண்டும் கோரமண்டல் விரைவு ரயில் பயணத்தை தொடங்கியது.
    * பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் 6.50 மணிக்கு பனாபனா ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
    * இதனிடையே, சுமார் 7 மணியளவில் யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் பாகாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.
    * அவ்வாறு தடம்புரண்ட அந்த ரயிலின் சில பெட்டிகள் அருகிலிருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளது
    * இந்த சூழலில் சில நிமிட இடைவெளியில் எதிர்திசையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், வழித்தடத்தில் விழுந்திருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது.
    * இதனால் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்த கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
    * அவ்வாறு தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியுள்ளன.
    * கோரமண்டல் விரைவு ரயிலின் 17 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்ததால் அந்த ரயில் பெரும் சேதமடைந்தது.
    * கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் ரயில்வே தண்டவாளங்களை தாண்டி சாலை ஓரமும் விழுந்தன.
    * 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் முதலில் தடம் புரண்ட ஹவுரா விரைவு வு ரயிலில் 3 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதால் அதில் சேதம் குறைவு.
    * கோரமண்டல்  விரைவு ரயில் அதிவேகத்தில் வந்து மோதியதால் அந்த ரயிலில் பயணித்தவர்களே உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், இதுவரை 280க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. கோரமண்டல் விரைவு ரயில் தவறான பாதையில் 127 கி.மீ. வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Odisha Train Accident
Odisha Train Accident

விபத்தில் சிக்கிய பலரது கை, கால்கள் துண்டானதோடு, பலர் உடல் முழுவதும் நசுங்கியும், தலை துண்டாகியும் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்த பலரை அடையாளம் காண முடியாத சூழல் உருவாகியுள்ளது. விபத்து நடத்த இடத்துக்கு பிரதமர் மோடி செல்ல இருக்கிறார். பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் மீட்புப் பணிகளை பார்வையிட உள்ள பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறவும் உள்ளார்.

சமீப காலங்களில், இந்தியா சந்தித்த மிக மோசமான ரயில் விபத்துகளின் ஒடிசா விபத்தும் இணைந்துள்ளது.

*ஜுலை 7, 2011 அன்று உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சாப்ரா – மதுரா எக்ஸ்பிரஸ், பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கொண்டிருந்த ரயில், பேருந்து மீது மோதி, பேருந்தை அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றது. இந்த விபத்து, இரவு 1.55 மணியளவில், ஆளில்லா ரயில்வே கேட்டில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*2012ம் ஆண்டை, இந்தியன் ரயில்வே வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டாக கூறலாம். அந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 14 ரயில் விபத்துக்கள் நிகழ்தன. குறிப்பாக, ஜூலை 30, 2012, அன்று டெல்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, அந்தப் பெட்டி முழுவதும் தீயிக்கிரையானது.‌ இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

*மே 26, 2014, அன்று உத்திரபிரதேசத்தில் சந்த் கபீர் நகரில், கோரக்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

*மார்ச் 20, 2015, அன்று டேராடூரியிலிருந்து, வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில், உத்திரபிரதேசத்தில் உள்ள பச்ரவான் ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. இன்ஜின் மற்றும் அதற்குப் பின் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

*நவம்பர் 20, 2016, அன்று இந்தூர் – பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 150 க்கும் மேலான பயணிகள் உயிரிழந்தனர். 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

*ஆகஸ்ட் 19, 2017, ஹரிதுவாரில் இருந்து புரி நோக்கி சென்று கொண்டிருந்த கலிங்க உட்கல் எக்ஸ்பிரஸ், உத்திரபிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் பகுதிக்கு அருகில் விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

*ஜனவரி 13, 2022, பிக்கானர் – கௌஹாத்தி‌ எக்ஸ்பிரஸ், மேற்குவங்கம் மாநிலத்தின் அலிபுர்துவார் என்னும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry