ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கி குமார் (இவர் மீதும் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன) என்பவர், பழிவாங்குவதற்காக அசோக்குமாரை தேடிய நிலையில், அசோக்குமார், கொக்கி குமாரிடம் சிக்கவில்லை.
Also Read : மின் கட்டணம் மீண்டும் உயருகிறது? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்கப்படலாம் என தகவல்!
இந்தநிலையில் சந்துரு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் ஜே.எம்.கோர்ட் எண் 2-ல் விசாரணைக்காக அசோக்குமார் இன்று காலை வந்துள்ளார். நீதிமன்ற காத்திருப்போர் அறையில் அசோக்குமார் அமர்ந்திருந்த நிலையில் அங்கு வந்த கொக்கி குமார், அசோக்குமாரை வாளால் வெட்ட முயன்றுள்ளார்.
அங்கிருந்து தப்பி ஓடிய அசோக்குமார் நீதிமன்றத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கேயும் துரத்தி சென்ற கொக்கி குமார், நீதிமன்றத்திற்கு உள்ளேயே வைத்து அசோக்குமாரின் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிய, கொக்கி குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த போலீஸார் நீதிமன்றத்தில் வெட்டுப்பட்டு கிடந்த அசோக்குமாரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்குளேயே வைத்து ரவுடி ஒருவரை மற்றொரு ரவுடி வாளால் வெட்டிய சம்பவம் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்வியையும் எழுப்பியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry