ஆர்யா நடிக்கும் சார்பட்டா திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் 5 ஆண்டுகளுக்கு முன் கல்யாண கிருஷ்ணன் இயக்க, ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தை தழுவியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை ப. ரஞ்சித் இயக்கியுள்ளார். வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஆர்யா, பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பீரியட் பிலிம் ஆக ரஞ்சித் இதனை எடுத்துள்ளார். உடல் எடையை கூட்டி, கட்டுமஸ்தான உடலுடன் மிரட்டும் பாக்ஸிங் வீரராக ஆர்யா நடித்திருக்கிறார்.
அது என்ன ‘பரம்பரை’?
வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது.தற்போது அதிகமாகப் பலரும் பயன்படுத்தும் க்ளப், அகாடமி என்கிற வார்த்தைக்குப் பதிலாக, அப்போது பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். 1970-களில் சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபு பாய் பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை, சுண்ணாம்புக் கால்வாய் பரம்பரை என மொத்தம் 7 குத்துச் சண்டை பயிற்சி மையங்கள் இருந்துள்ளன.
இதில் இடியாப்ப நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சூளைப் பகுதியையும், சார்பட்டா பரம்பரையினர் ராயபுரம் பகுதியையும் சேர்ந்தவர்கள். இவர்களில் சுண்ணாம்புக் கால்வாய் பரம்பரை, சார்பட்டா பரம்பரை ஒரு அணியாவும், இடியாப்ப பரம்பரை, எல்லப்ப செட்டி பரம்பரை ஒரு அணியாவும் மோதியிருக்கிறார்கள்.
மீண்டும் தலித் அரசியல்
இந்த படத்தில் ஆர்யா, கபிலன் என்ற கதாபாத்திரத்தில் சார்பட்டா பரம்பரை சேர்ந்தவராக நடித்துள்ளார். இடியப்ப நாயக்கர் பரம்பரை உடன் உள்ள இவரது பகை, போட்டி, அரசியல் என பல விஷயங்களை இப்படத்தில் பார்க்க முடியும். இந்தப்படமும் வழக்கமான தலித் அரசியலை பேசும் என்பதை பா.ரஞ்சத்தின் டிவிட்டர் பதிவில் இருந்து உணரமுடிகிறது. ஒரு எளிய மனிதனின் வெற்றி எவ்வளவு முக்கியமானது, அந்த வெற்றி அவ்வளவு சீக்கிரம் அவனுக்கு கிடைக்குதா? அப்டின்றது தான் இந்த படத்தின் கரு என ரஞ்சித் கூறியிருக்கிறார்.
.@K9Studioz proudly presents the First Look of @arya_offl‘s #SarpattaParambarai 🥊
A @beemji film
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா pic.twitter.com/kOsTORQwXQ
— pa.ranjith (@beemji) December 2, 2020
‘பூலோகம்’ பாணியில் ‘சார்பட்டா பரம்பரை’
2015-ம் ஆண்டு ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் வெளியான “பூலோகம்” படமும் வடசென்னை குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டதுதான். எஸ்.பி. ஜனநாதன் கதையை அவரது உதவியாளரான கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படம் கம்யூனிசம் பேசியது, சார்பட்டா பரம்பரை தலித் அரசியல் பேசப்போகிறது. இதுதான் இரண்டு படங்களுக்குமான மைய வித்தியாசம்.
பா. ரஞ்சித் மீதான கதைத் தழுவல் புகார்
கோபி நயினார் வட சென்னையை மையமாக வைத்து, கால்பந்தாட்ட வீரன் பற்றிய ஒரு கதையை உருவாக்கினார். “கருப்பர் நகரம்” என்று பெயரிடப்பட்ட அந்தப்படத்தின் ஹீரோவாக அகில், ஹீரோயினாக அருந்ததி நடித்தனர். சில காரணங்களால் படம் தடைப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் இயக்குநர் ரஞ்சித் அட்டக்கத்தி படத்தைத் எடுத்து ரிலீஸ் செய்தார்.
படத்தை பார்த்த கோபி நயினார், கருப்பர் நகரம் படத்தின் ஐந்து முக்கிய காட்சிகள் அட்டகத்தி படத்தில் இடம்பெற்றதாக அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. தன்னுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட பா.ரஞ்சித் இது போல செய்துவிட்டாரே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் வேதனைப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், மெட்ராஸ் படத்தின் ட்ரைலர் மற்றும், கார்த்தியின் பேட்டி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த “கருப்பர் நகரம்” தயாரிப்பாளர் பாலு, அதிர்ச்சி அடைந்தார். தனது படத்தின் காட்சிகள் அப்டியே மெட்ராஸ் படத்தில் இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் அவர் புகார் அளித்தார். ‘கருப்பர் நகரம்’ என்ற படத்தின் காப்பி தான் பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படக்கதை என்ற குற்றச்சாட்டையும் அறம் பட இயக்குநர் கோபி நயினார் கூறியது குறிப்பிடத்தக்கது.
வடசென்னையின் பாக்சிங் கலாச்சாரம்
ஃபுட்பால், கபடி, கில்லியைவிட, ஒருகாலகட்டத்தில், வடசென்னையில் பாக்சிங் மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது. 1940லிருந்து 1990 வரையில் வடசென்னை மக்கள், வாழ்வின் அங்கமாகவே பாக்சிங்கை கருதியுள்ளனர். வடசென்னையிலிருக்கும் நேரு ஸ்டேடியம், கண்ணப்பர் திடல் மற்றும் தண்டையார்பேட்டை மைதானம் போன்ற இடங்களில் போட்டிகள் நடந்துள்ளன. இதைக்காண குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரசிகர்கள் வரை வந்துள்ளனர்.
பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட பாக்சிங், ஒரு கட்டத்தில் வன்முறை, கலவரம், பகை என்று விளையாட்டை மீறிய ஒன்றாக மாறியது. பாக்சிங் விளையாடிய சிலர் ரவுடியிசத்திலும் ஈடுபட்டுள்ளனர். களத்தில் தோல்வியடைந்தால், களத்திற்கு வெளியே அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வது போன்ற வன்முறையால் 1989ஆம் ஆண்டு இந்த ஆட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டது.
பழைய களத்தின் நீட்சியாக, வடசென்னையில்தான் பாக்ஸிங் கற்றுக்கொள்வோர் இன்னமும் அதிகமாக இருக்கின்றனர். பாக்ஸிங் தரும் உற்சாகத்தால் சிலர் ரவுடியிஸத்தை கையிலெடுக்கின்றனர். இதனால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால், பாக்சிங்கை வாழ்வாதாரத்துக்கான வழியாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். பாக்சிங் பயிற்சியாளராக ஆவது, ஜிம் வைப்பது, சினிமாவில் வில்லன்களாகவும், ஜிம் பாய்ஸ்களாகவும் நடிப்பது என சம்பாத்தியத்துக்கான வழியாக அந்தக் கலையை பலர் பயன்படுத்துகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry