தேர்தல் முடிவுகளால் புதுவையில் சின்னாபின்னமான கட்சிகள்! எந்தெந்த கட்சிகளுக்கு ஆதாயம்? வேல்ஸ் சிறப்புப் பார்வை!

0
10

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், அதிக ஆதாயம் அடைந்த இரண்டு கட்சிகள், அதிக சேதாரம் அடைந்த இரண்டு கட்சிகள் எவை?, அதற்கான காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.

திமுக, காங்கிரஸ் உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவு வெளியாகி என். ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார். இந்தத் தேர்தலில், அதிக ஆதாயம் அடைந்த, அடையப்போகின்ற கட்சிகள் என்று பார்த்தால், ஒன்று பாஜக, மற்றொன்று திமுக.

மலர்ந்த தாமரைபாஜக

காங்கிரஸ் கட்சி மீதான, குறிப்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்தி காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தின் என்ட்ரி, சாமிநாதனின் இயலாமையால் துவண்டு கிடந்த பாஜகவுக்கு புத்துயிர் கொடுத்தது. இவரைத் தொடர்ந்து ஜான்குமார் மற்றும் ஏராளமான மாற்று கட்சியினர் படை எடுத்ததும் பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

இதனால் தெம்பான பாஜக, கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என உறுதியாக இருந்து 9 இடங்களை பெற்றது. அதுமட்டுமின்றி, தேவையான அளவுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகம், மத்திய அமைச்சர்கள், பிற மாநில எம்.பி.க்கள் பிரச்சாரம் மற்றும் மேற்பார்வையால் ஆறு தொகுதிகளை வென்றது அக்கட்சி. இத்தனைக்கும் மேலாக துணை முதல்வர் என்ற புதிய பதவியுடன் அமைச்சரவையிலும் பங்கு பெற்று புதுச்சேரி சட்டசபையில் கம்பீரமாக நுழைவதால், இந்தத் தேர்தலில் அதிக ஆதாயம் அடையும் முதல் கட்சி பாஜகதான். அத்துடன், தென்மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த 2-வது மாநிலம் புதுச்சேரியாகும்

அக்னி நட்சத்திரம்திமுக

தனித்துப் போட்டியிட வேண்டும் என மாநில அமைப்பாளர்கள் மூன்று பேரும் உறுதியாகவே இருக்க, கூட்டணி என்பது தமிழகத்தை ஒட்டி எடுக்க வேண்டிய முடிவு என தலைமை சமாதானப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 13 இடங்களில் திமுக களம் கண்டது.

புதிய வேட்பாளர்களை களம் இறக்கினாலும், அவர்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தது கட்சிக்கு பலம் சேர்த்தது. அதற்கான பலனை திமுக அறுவடை செய்திருக்கிறது. கடந்த முறை மூன்றே தொகுதிகள் என்றிருந்த, திமுகவுக்கு தற்போது ஆறு எம்.எல்..க்கள் கிடைத்திருக்கிறார்கள். அதாவது 100 சதவிகித வளரச்சி. சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தும் கிடைத்திருப்பதன் மூலம், இந்தத் தேர்தலில் இரண்டாவது ஆதாயம் அடையக்கூடிய கட்சியாக திமுக இருக்கின்றது.

கழுதை, கட்டெறும்புகாங்கிரஸ்

தேர்தல் முடிவுகளில் அதிக சேதாரத்தை கண்ட இரண்டு கட்சிகளில், முதலிடம் பிடிப்பது காங்கிரஸ். நாராயணசாமி மீதான அதிருப்தியால், முக்கிய நிர்வாகிகளை இழந்தது புதுச்சேரி காங்கிரஸ். இரண்டு அமைச்சர்கள் கட்சி மாற, ஒரு அமைச்சர் தொகுதி மாற, முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட தயக்கம் காட்ட, செய்வதறியாது திணறியது காங்கிரஸ்.

இறுதியில், 14 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் சுயட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து. யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது?, ஸ்வீட் பாக்ஸ்களை யார் கொடுப்பது? என ஒவ்வொரு மட்டத்தில் நிலவிய குழப்பத்தின் பலனாக, ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை மட்டுமே கொடுத்தனர் வாக்காளர்கள். 2016 தேர்தலில் 15 எம்.எல்.க்களுடன் அரசாண்ட கட்சி, தற்போது 2 இடங்கள் என்ற அளவில் சுருங்கி, பெரும் சேதாரத்தை சந்தித்திருக்கிறது. இதன் மூலம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகவிட்டது காங்கிரஸ் நிலை

இலையுதிர் காலம்அதிமுக

பாஜக, என்.ஆர். காங்கிரஸிடம் சீட் பெறுவதிலேயே அதிமுக மாநில அமைப்பாளர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே 5 இடங்கள் கிடைத்தது. இது பின்னடைவுக்கான முதல் காரணம். மக்களிடம் நிலவிய பாஜக எதிர்ப்பு மனநிலை தடையாக இருந்தாலும், என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகியவற்றுடன் சொந்த செல்வாக்கும் கைகொடுக்கும் என அதிமுகவினர் நம்பினார்கள்.

ஆனால், அதிமுகவினரை அதிர வைத்தார் ரங்கசாமி. அவரிடம் இருந்தோ, அவரது கட்சியிடம் இருந்தோ எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் ரங்கசாமி பிரச்சாரமும் செய்யவில்லை. இதனால் களத்தில் திணறிய அதிமுக வேட்பாளர்கள்,கடைசியில் ஸ்வீட் பாக்ஸ்களை நம்பியிருந்தனர். ஆனால், அதிமுக கொடுத்த இனிப்பை சுவைத்துவிட்டு, மாற்றுக் கட்சிகளில், நம்பிக்கையானவர்களுக்கு வாக்களித்தனர் மக்கள். இதனால், போட்டியிட்ட ஐந்து தொகுதிகளையும் இழந்தது அதிமுக. இதன் மூலம் ஐந்தில் இருந்து சுழியமாகச் சுருங்கி, அதிமுகவும் சின்னாபின்னமாகிவிட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry