கொரோனா பற்றி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ! கோவையில் ரெட் அலர்ட் என பரப்பப்படும் தகவலால் பரபரப்பு!

0
7

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், 2 வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எச்சரிப்பதுபோன்ற குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், தேர்தலின்போதே லாக் டவுன் போடப்படலாம் என அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, “இது தவறான தகவல், குரல் பதிவில் இருப்பது அரசு மருத்துவமனை டாக்டர்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry