பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும்! கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை!

0
1142

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து, ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்ற அறிவிப்பு, பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அறிவிப்பு, உயர்கல்வி பின்னேற்பு அனுமதி ஆகியவை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த அறிவிப்புகளை வெளியிடாதது ஏற்புடையதாக இல்லை.

Also Read: வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!

ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு வெளியிடாமல், தேர்வு சமயத்தில் ஏப்ரல் மாதமும் ஆசிரியர் நிர்வாக மாறுதல் தொடரும் சூழல் உருவானால், கடுமையாக விமர்சனத்துக்கு உட்பட்ட துறையாக கல்வித்துறை அமையும் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

நியமனத் தேர்வினை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் உடன் நிரப்பிட வேண்டுமென தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

EMIS இணையதளம் பாதுகாப்பனது அல்ல; ஆசிரியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு பலருக்கு கைமாறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உடனடியாக இதை தடுத்து நிறுத்தி பாதுகாத்திட வலியுறுத்துகிறோம்.

Also Read: குக்கீஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய், கேன்சர் வரக்கூடும்! எச்சரிக்கும் ஆய்வு ரிப்போர்ட்! Vels Exclusive

வரும் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 110 கோடி ரூபாய், விளம்பரத்திற்கு பயன்படுமே தவிர கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்கும் திட்டமாக ஒருபோதும் அமையாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற இயலாது.
ஆறாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் கைகொடுக்காது. பள்ளிக்கல்வித்துறை சுய பரிசோதனை செய்திட வேண்டுகிறோம்.

Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!

அதேநேரம், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பாராட்டப்பட வேண்டிய பல சிறப்பு அம்சங்களை பட்டியலிடுகிறோம்.

1. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

2. வரும் கல்வி ஆண்டில் இருந்து 150 கோடி மதிப்பில் 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

3. உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 296 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

4. 13 மாவட்டங்களுக்கு மாதிரி பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

5. அரசு பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் 10 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

6. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் 8 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.

7. தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக “தமிழ் மொழி கற்போம்” என்ற திட்டம் தொடங்கப்படும்.

8. தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை பெரிதும் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

வரவேற்க வேண்டிய அம்சங்களை பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகளை முறைப்படி செயல்படுத்துகின்ற போதுதான், அது கல்வி நலன் காக்கப்படும் அறிவிப்புகளாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Recommended Video

லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry