இந்து முன்னணி கொடியை அகற்ற மிரட்டல்! கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா இன்ஸ்பெக்டர்? தென்காசியில் பதற்றம்!

0
86

தென்காசி மாவட்டத்தில் வீட்டில் ஏற்றப்பட்டிருந்த இந்து முன்னணி கொடியை, உரிமையாளரை மிரட்டி காவல் ஆய்வாளர் அகற்றவைத்ததால் மதப்பதற்றம் நிலவுகிறது.

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த புலவனூர் கிராமத்தில் சுமார் 30% கிறித்துவர்கள் வசிக்கிறார்கள். அந்தக் கிராமத்தில்தான் தற்போது மதப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதனிடம் வேல்ஸ் மீடியா சார்பில் பேசியபோது, கடையம் காவல் ஆய்வாளர் ரகுராஜ், மூதாட்டி ஒருவரை கேஸ் போடுவேன் என மிரட்டுவதை வீடியோவில் காணலாம். கடந்த 27-ந் தேதி காலை இந்தச் சம்பவம் நடந்தது.

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் புலவனூர் பகுதி தலைவர் செல்லத்துரை. இவரது வீட்டை ஒட்டி சர்ச் கட்டப்பட்டுள்ளது. சர்ச் மற்றும் செல்லத்துரை தரப்பு மீது ஏற்கனவே ஆக்கிரமிப்பு புகார் உள்ளது. இந்து முன்னணியைச் சேர்ந்த செல்லத்துரை தனது வீட்டில் இயக்கக் கொடியை ஏற்றியிருந்தார். அத்துடன் மதமாற்றத்துக்கும் அவர் தடையாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பு, டிரான்ஸ்ஃபார்மரை ஆஃப் செய்துவிட்டு நள்ளிரவில் செல்லத்துரையின் ஆட்டோவையும், வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.    

இதுதொடர்பாக கடையம் போலீஸார் கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்த பிறகே, 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இருதரப்பும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை வருவாய்த்துறையினர் உறுதி செய்தனர். செல்லத்துரை வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. சுவரை அகற்ற செல்லத்துரை சம்மதித்த நிலையில், சர்ச் ஆக்கிரமித்துள்ள 420 சதுர அடி இடத்தை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர்.

இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள், கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜுக்கு அழுத்தம் கொடுத்து செல்லத்துரை மீது வழக்கு பதிந்து கைது செய்ய வைத்துள்ளனர். செல்லத்துரையை கைது செய்ய வந்த இன்ஸ்பெக்டர் ரகுராஜ், வீட்டிலிருந்த இந்து முன்னணி கொடியை அகற்றுமாறு மூதாட்டியை மிரட்டுகிறார். சர்ச் ஆக்கிரமிப்பை அகற்றாமல், முதலில் செல்லத்துரை வீட்டு காம்பவுண்ட் சுவரை அகற்ற போலீஸார் முற்பட்டுள்ளனர். இதற்கு செல்லத்துரை எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கைது செய்து, அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் சர்ச் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்த இடத்தையும் வருவாய்த்துறை மீட்டதுஎன்று கூறினார்.   

நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தென்காசி மாவட்டத்தில் மதப்பதற்றமாக உருமாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சர்ச் ஆக்கிரமித்திருந்த 420 சதுர அடி இடம் பறிபோக இந்து முன்னணியினரே காரணம் என, புலவனூரில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். செல்லத்துரை ஆட்டோ மற்றும் வீடு, கிறிஸ்தவர்களால் ஏற்கனவே தாக்கப்பட்ட நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தங்கள் இயக்கக் கொடியை அகற்றுமாறு காவல் ஆய்வாளர் விடுத்த மிரட்டலை சட்ட ரீதியாக அணுக இந்து முன்னணி முடிவு செய்திருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry