ஒரு கோழி முட்டை, ரூ.2.24 என்ற விளம்பரத்தின் பகீர் பின்னணி! போலீஸ் விசாரணையில் அம்பலமான மோசடி!

0
120

ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால், ஆண்டு முழுவதும், ஒரு கோழி முட்டை ரூ.2.24-க்கு வழங்கப்படும் என்ற விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இது மோசடி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயலில் இயங்கும் Rafoll Group என்ற நிறுவனம், ஆடு, மாடு, கோழிகளை வளர்க்க தமிழகம் முழுவதும் ஆட்கள் தேவை என முன்னணி தமிழ் நாளிதழ்களில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. தமிழகம் முழுவதும் 75,000 பணியிடங்கள் உள்ளதாகவும், ரூ.13,000 முதல் ரூ.60,000 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பார்த்து பலருக்கும் தலை கிறுகிறுத்தது.

இது அடங்கிய நிலையில், பிரபல நாளிதழில் கடந்த 18-ந் தேதி EGG MART என்ற பிரிவை தொடங்குவதாக Rafoll Group முதல்பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. அதில், ரூ.700, ரூ.1400, ரூ.2800 ஆகிய மூன்று திட்டங்களில் முன்கூட்டியே பணம் செலுத்துவோருக்கு, ஒரு முட்டை ரூ.2.24 என்ற விலையில்  வருடம் முழுவதும் வீட்டுக்கே வந்து முட்டை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்த விளம்பரம் அன்றைய தினம் பேசுபொருளாகவும் மாறியது. அதேநேரம் விளம்பரத்தில் இருந்த வங்கிக் கணக்குக்கு பலரும் பணம் செலுத்தத் தொடங்கினார்கள்.  விளம்பரம் வெளியான அன்றைய தினம் மட்டும் 310 பேர் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தியுள்ளனர். இவர்கள் அனுப்பிய பணம் ரூ.4.5 லட்சமாகும்.

இந்த விளம்பரத்தை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு கோழிப் பண்ணையார்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல முட்டை விற்பனையில் யாரும் ஏமாற வேண்டாம் எனவும், முட்டை உற்பத்தி செலவே ரூ. 4.80-ஆகிறது எனவும் அந்தச் சங்கத்தினர் கூறினர்.

இவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் கவனத்தை ஈர்த்தன. இந்த விளம்பரத்தின் பின்னணி என்ன? யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள, நிறுவனத்தின் உரிமையாளரை நேரில் ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து அரக்கோணத்தைச் சேர்ந்த சிவம் நரேந்திரன் என்பவர் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “முறையான உரிமம் பெறாமல் Rafoll Group நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. விளம்பரத்தைப் பார்த்து பணம் செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டது. பிறகு, அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு யாரெல்லாம் பணம் அனுப்பினார்களோ, அவர்களது வங்கிக் கணக்குக்கே, மீண்டும் அவர்கள் அனுப்பிய தொகை அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம்” என்று போலீஸார் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry