அவதாரம் எடுக்கும் ரங்கசாமி! பாஜக-வுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி! தேவைப்பட்டால் திமுக-வுடன் கைகோர்க்க ஆயத்தம்! 

0
22

புதுச்சேரியில் பாஜக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இதையெல்லாம் எதிர்பார்த்துதான் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பாஜகவின் பகல் கனவு பலிக்குமா? என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்

பாஜக ஆதிக்கம்

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தாக வேண்டும் என்று, பாஜகவால் ரங்கசாமி நிர்ப்பந்திக்கப்பட்டார். கூட்டணி பேச்சுவார்த்தையில் ஆதிக்கம் செலுத்திய பாஜக, ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று கடைசிவரை அறிவிக்கவில்லை. மர்மப் புன்னகையுடன், கட்சி நிர்வாகிகளே புரிந்துகொள்ள முடியாத ஒருவித மனக்கணக்குடன் ரங்கசாமி இதையெல்லாம் கடந்து சென்றார்

சொந்த செல்வாக்கால் வெற்றி

பாஜகவுக்கான பதிலை செயலில் காட்டும்விதமாக, என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை, அந்தத் தொகுதிகளை அவர் கண்டுகொள்ளவும் இல்லை. முடிவில் என்.ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வென்றது. பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ள நமச்சிவாயம், ஜான்குமார் போன்ற ஆறு பேருமே சொந்த செல்வாக்கால் மட்டும் வெற்றி பெற்றவர்கள்.

தவிக்கவிட்ட என்.ஆர்.

இதையடுத்து, கூட்டணியைப் போன்றே, அமைச்சரவை விவகாரத்திலும் பாஜக பெரியண்ணன் மனப்பான்மையை காண்பிக்கத் தொடங்கியது. தங்கள் கட்சி சார்பில் துணை முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என பாஜக அறிவித்தது. ஆனால், மந்தகாசப் புன்னகையுடன், அமைச்சர்கள் யாருமின்றி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்.ஆர்.- கவிழ்க்க முயற்சி?

மகுடிக்கு ஆடும் பாம்பல்ல ரங்கசாமி என்பதை உணர்ந்த பாஜக மேலிடம், அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நியமன எம்.எல்..க்கள் மூன்று பேரை நியமித்தது. இதன் மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுயேச்சைகள் மற்றும் மாற்றுக் கட்சியினரை இழுத்த ஆட்சியமைக்க முயற்சிக்கலாமா? என டெல்லி மேலிடம் யோசித்தது.

மேலிடத்தின் இந்த முடிவை நமச்சிவாயம் போன்ற தலைவர்களே ஆதரிக்காத நிலையில், அவசரமாக நியமன எம்.எல்..க்களை நியமித்தது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்துவிட்டது. அதேபோல் வாரியத் தலைவர் பொறுப்புகளையும் நிமயமிக்க வேலைகள் நடந்து வருகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறதா? என தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை

பாஜகவுக்கு துணை முதலமைச்சர், அமைச்சர் பொறுப்புகள், வாரியத் தலைவர் பொறுப்புகள் தருவதாக ரங்கசாமி இதுவரையில் அறிவிக்கவில்லை. கடைசி நேரத்தில் பாஜகவை கழட்டிவிட்டு, திமுகவுடன் சேர்ந்து ரங்கசாமி ஆட்சி அமைப்பார் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் என்.ஆர். காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “அப்படியொரு எண்ணம் என்.ஆர்.க்கு இல்லை. பாஜகவை கழட்டிவிட்டால், கடந்த ஆட்சியைப் போன்று ஆளுநர் மூலம் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது என அவர் நினைக்கிறார்என்று கூறுகின்றனர்.   

மக்கள் ஆதரவோடு திமுகவுடன் ஆட்சி

ஆனால், பெரியண்ணன் மனப்பான்மையில், பாஜக தொடர்ந்து பிடிவாதப் போக்கோடு செயல்படுமானால், 6 எம்.எல்..க்கள் உள்ள திமுகவுடன் கூட்டணி வைக்க ரங்கசாமி தயங்கமாட்டார் என்றே தெரிகிறது. அப்படியான நிலை உருவானால், அவர் மக்கள் கருத்தை கேட்கலாம். திமுகவுடன் ஆட்சி அமைத்தபிறகு, ஆளுநர் மூலம் பாஜக நெருக்கடி கொடுத்தால், அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெருந்தொற்று சூழலுக்குப் பிறகு அவர்களை ஒன்று திரட்டி, மாபெரும் இயக்கத்தை முன்னெடுக்கவும் ரங்கசாமி தயங்கமாட்டார் என்று தெரிகிறது.

உதவிக்கரம் நீட்டும் திமுக!

இதற்கான அத்தனை உதவிகளையும் செய்ய திமுக தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது. பத்துப்பேரை கூட்டிக்கொண்டு ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய நாராயணசாமியைப் போல் அல்லாமல், சமூக ஊடகங்கள் வழியாக பாஜகவின் போக்கை அம்பலப்படுத்தவும், பாஜக எதிர்ப்பு இயக்கத்தை பெரிய அளவில் முன்னெடுக்கவும் உதவுவதாக திமுக தரப்பில் இருந்து ரங்கசாமிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

பாஜகவிடம் அனுசரணையாக இருக்கவே ரங்கசாமி விரும்புகிறார். ஆனால் தவறான ஆலோசனை மூலம், ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினால், புதுச்சேரியில் பாஜகவுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தவும் அவர் தயங்கமாட்டார். கிடைத்த வாய்ப்பை சரியான வழியில் பாஜக பயன்படுத்துமா? அல்லது தவறவிடுமா? என்பது, ரங்கசாமி பூரண குணமடைந்து ஊர் திரும்பியவுடன் தெரிந்துவிடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry