பதைபதைக்க வைக்கும் கொரோனா! சமாளிக்க முடியாமல் திணறும் மா.சு.! முழு ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் ஏன்?

0
38

உத்தரப்பிரதேச அரசின் பாணியில், ‘வாழ்க்கையும், வாழ்வாதாரமும் முக்கியம்’ என்ற நோக்கில், பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியும், உ.பி. அரசின் TEAM 11ஐப் போல அனைத்து கட்சி குழு அமைத்தும் தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கையில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்து தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. தமிழக அரசு எங்கே சறுக்குகிறது?

அரசு எங்கே சறுக்குகிறது?

பெருந்தொற்று பரவலில் ஒவ்வொரு நாளும் முக்கியம் என்ற நிலையில், தேர்தலில் பெரும்பான்மையாக வென்ற திமுக கூட்டணி, உடனடியாகப் பதவியேற்று ஊரடங்கை அமல்படுத்தாது முதல் சறுக்கல். மக்களிடம் அதிருப்தி சம்பாதிக்கக் கூடாது என்ற நோக்கில், காவல்துறையினரின் கைகளை கட்டிவிட்டு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 12 மணி வரை பெரிய கடைகள் தவிர்த்து, மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டன. பொதுவாகவே வெயில் காலங்களில் 12 மணி வரைதான் மக்கள் அதிகம் வெளியே நடமாடுவார்கள். இதனால், ஊரடங்கு எந்தவிதத்திலும் மக்களை கட்டுப்படுத்தவில்லை.

இது பயன்ததரவில்லை என்றானவுடன், ஊரடங்கு தளர்வு நேரமானது 6-10 என குறைக்கப்பட்டது. சலூன் கடைகள், பழச்சாறு மற்றும் தேநீர் கடைகள், மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. பார்சலுக்கு மட்டும் ஹோட்டல் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வெயில் காலத்தில் பழச்சாறு மற்றும் தேநீர் கடைகள் மூடச்சொன்னது முன்களப் பணியாளர்களை தவிக்க வைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் ஊரடங்கு மட்டுமின்றி, இ-பாஸ் முறையும் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையேகூட அவ்வளவு எளிதில் பயணித்துவிட முடியாது. தற்போதோ, இ-பதிவு என்ற முறையில், அனுமதி அளிப்பதில் எந்த கெடுபிடியும் இல்லை. ஆனால், அந்த இ-பதிவு முறையை அமல்படுத்துவதிலும் அரசின் கையாலாகத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும், திருமண அனுமதியை சேர்ப்பது, நீக்குவது என அரசு நிர்வாகம் ஆடும் ஆட்டமும் சறுக்கலுக்கு நல்லதொரு உதாரணம்.

தாண்டவமாடும் தடுப்பூசி அச்சம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது, தடுப்பூசி குறித்து நேர்மறை எண்ணங்களை மு.க. ஸ்டாலின் போன்றோர் மக்களிடையே ஏற்படுத்தாததும் அரசுக்கு இப்போது பெரும் சறுக்கலாகி உள்ளது. கூட்டணித் தலைவரான திருமாவளவன், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, மக்களிடையே அதுகுறித்த அச்சத்தை விதைத்தார். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சற்றேறக்குறைய 70-80% பேர் தயாராக இல்லை. இத்தனைக்கும் தடுப்பூசி கையிருப்பில் வைத்திருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. தடுப்பூசி ஒருபுறம் என்றால் ரெம்டெசிவர் ஊசி வாங்க, தனிநபர் இடைவெளியை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் முட்டிமோதியது சுகாதாரத்துறையின் நிர்வாகச் சறுக்கலுக்கு எடுத்துக்காட்டு.

சொந்தக் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பொதுவெளியில் பேசும் அளவுக்கு, கோவிட்-19 பரவல் மற்றும் இறப்பு குறைத்துக்காட்டப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகளும் பூசி மெழுகப்படுகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் பரவலோ, இறப்போ குறைந்தபாடில்லை, அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கான காரணத்தை கண்டறியாமல், நிர்வாக மாறுதல்கள், அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையை மூடுவது, அனைத்து கட்சி எதிர்ப்புக்கு மத்தியில் கல்வித்துறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவருவது போன்றவற்றில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. ரூ.2,000 நிவாரணம் தருவதற்கு விழா, அமைச்சர்கள் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பது, முதல் தவணை நிவாரணத் தொகையை வாங்க தனிமனித இடைவெளியின்றி மக்கள் திரள்வது இதுவும் பெரும் சறுக்கலே.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது இயன்றவர்கள் நிதி தருமாறு மத்திய, மாநில அரசுகள் கோரின. அப்போது, மக்களே பிச்சை எடுக்கும்போது, அவர்களிடம் பிச்சை கேட்பதா என திமுக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. ஆனால், தற்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் தாராளமாக நிதி தாருங்கள் என திமுக கேட்டது. நிதியும் குவிந்துவரும் நிலையில், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களை கைதூக்கிவிடுவதற்கான திட்டத்தை கண்டறியாததும் சறுக்கல்தான்.

சித்தா மீதான வெறுப்பு

ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்த நிலையில், அதை ‘தண்ணி’ என சுகாதாரத்துறை அமைச்சர் பேசியது நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோல், பெருந்தொற்றால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதல் அலையில் பல ஆயிரம் பேரை காப்பாற்றிய சித்தா மற்றும் பாரம்பரிய மருந்துகள் பற்றி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதும், நீராவி பிடிப்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சரே சந்தேகம் கிளப்பியதும், 2-வது அலையில் சித்த மருத்துவத்துக்கு போதிய முக்கியத்துவம் தராததும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி, சுகாதாரத்துறை அமைச்சரைவிட, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அதிகம் பேசுவதும், ஒழுங்கற்ற நிர்வாகத்துக்கும், சறுக்கலுக்கும் உதாரணம்.

அரசைக் குறை சொல்வது நியாயமா?

கோவிட்-19 என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மனித குலம் போரிட்டுக் கொண்டிருக்கிறது. போர்க் களத்துக்கு வந்துவிட்டபிறகு, நாங்கள் வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது, நாங்கள் பழக வேண்டும், உடனடியாக எங்களால் போரிட முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தால், மக்களை பேராபத்தில் இருந்து காக்க முடியாது. அது நல்லதொரு அரசுக்கு அழகல்ல.

இளம் வயதினரை குறிவைக்கும் 2-வது அலை, கிராமப்புறங்களில் அதிகம் பரவுகிறது. இந்த பேரிடரை கையாளும் திறன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், தேசிய சராசரி குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் நாளுக்குநாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

என்ன தீர்வு?

ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும் என்று நினைக்காமல், சுகாதாரத்துறைக்கு வேறொரு அமைச்சரை அடையாளம் காண வேண்டும். (மா.சு., நல்ல களப்பணியாளராக அறியப்பட்டாலும், பேரிடரை சமாளிக்க அவர் திணறும் நிலையில், அடுத்ததாக கறுப்புப் பூஞ்சையும் விஸ்வரூபமடுத்து வருகிறது) ஊரடங்கை முழுமையாக்கி கடுமையாக அமல்படுத்துவது அவசியம். இ-பாஸ் முறையை மீண்டும் அமல்படுத்தி, கடுமையான பரிசீலனைக்குப் பிறகு அனுமதி தரவேண்டும். பரிசோதனைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி, தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

Also Read: கோவிட்-19 பேரிடரை மேலும் சிக்கலாக்கும் கருப்பு பூஞ்சை நோய்! பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?

சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகள் பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தாலுகா அளவில் சித்தா, ஹோமியோபதி மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். அங்கு, ஆரம்ப மற்றும் நடுநிலை தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் பெருமளவில் குவிவது தடுக்கப்படும். அதேபோல், காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனைத்து ஊர்களிலும் தெருத்தெருவாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry