பி.கே. கையில் வேட்பாளர்கள் லிஸ்ட்! ஓ.கே. செய்த உதயநிதி! மகன், மருமகன் மோதலால் ஸ்டாலின் அதிருப்தி!

0
38

திமுகவின் தேர்தல் வியூகங்களுக்காக 350 கோடி ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட பி.கே. என்கிற பிரசாந்த் கிஷோர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உதயநிதி ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரும், அதிமுகவுக்காக சுனில் என்பவரும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். பிரசாந்த் கிஷோருடன், சுனில் இணைந்து பணியாற்றியவர் என்பதுடன், திமுகவின் அசைவுகள் அனைத்தும் நன்றாக அறிந்தவர்.

திமுகவில் ஓ.எம்.ஜி. குரூப் என்ற பெயரில் செயல்பட்ட சுனில் டீம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே, நீதி கேட்க வா, கிராம சபைக் கூட்டம் என்ற புதுமையான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தியது.

சுனில் விலகிய நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு உதயநிதியின் பரிபூரண ஆதரவு உள்ளது. அதிகபட்சம் 55 வயதுக்கு மேல் ஆன நிர்வாகிகள், தாங்களாகவே ஒதுங்க வேண்டும் அல்லது ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே இவர்களது நிலைப்பாடு. எனவே, மாவட்ட நிர்வாகிகளைக் கூட பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவன ஊழியர்கள் மதிப்பதில்லை என்று பரவலாகவே கூறப்படுகிறது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றிய முக்கிய ஐபேக் நிர்வாகிகள் தற்போது வெளியேறிவிட்ட நிலையில், அனுபவமில்லாதவர்களை களத்தில் இறக்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர். இதற்காக விளம்பரம் கொடுத்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாமக நிர்வாகியை வேலைக்கு வருமாறு ஐபேக் நிறுவனம் அழைத்த அவலமும் நடந்தது.

இதைப்போன்று தேர்வு செய்யப்பட்டவர்கள், 234 தொகுதிகளிலும் மூன்று நபர்களை முன்னிறுத்தி சர்வே எடுத்துள்ளதாகத் தெரிகிறது. வயது குறைந்த, பண வசதி மிக்க நபர்களே இந்தப்பட்டியலில் இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளரின் கவனத்துக்குக் கூட கொண்டு செல்லாமல் நடத்தப்பட்ட இந்த சர்வே அடிப்படையில், 234 வேட்பாளர்களை பி.கே. டீம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தற்போதுள்ள சீனியர்களுக்கு சீட் கிடையாது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், வழக்கமான திமுக பாணியில் அல்லாமல், மாவட்ட செயலாளர்களை டம்மியாக்கிவிட்டு, தொகுதிவாரியாக பி.கே. டீம் ஆட்கள் களமிறக்கப்பட உள்ளனர். வைட்டமின் ப விநியோகம் முதற்கொண்டு, இவர்களது வழிகாட்டுதல்படியே மாவட்ட செயலாளர்களும், மற்ற நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.    

சீனியர்களை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டினால், தேர்தலில் பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டிவரும் என்பதால், ஸ்டாலின் இதில் தயக்கம் காட்டுவதாக திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், உதயநிதி, அன்பில் மகேஷ், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் இதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

இவர்களின் இந்த நடவடிக்கை குடும்பத்திலும் குழப்பத்தை அதிகரித்துள்ளதாக ஆழ்வார்பேட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, பழனிவேல் தியாகராஜன் மேற்பார்வையில் பிரசாந்த் கிஷோர் செயல்பட வேண்டும் என்றுதான் முதலில் பேசப்பட்டதாம். ஆனால், பி.கே. பணியைத் தொடங்கியபிறகு, பழனிவேல் தியாகராஜன் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.

உதயநிதி ஆதரவுடனேயே தனது உறவினரை பி.கே. ஓரங்கட்டுகிறார் என சபரீசன் ஏற்கனவே மனக்குமுறலில் இருந்து வந்துள்ளார். கட்சியில் சீனியர்களை ஓரங்கட்டுவது, தனக்கு சொல்லாமலும், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை பெறாமலும் வேட்பாளர்களை தேர்வு செய்வது ஆகியவை சபரீசனை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளதாக அறிவாலய பட்சிகள் கூறுகின்றன. இவர்களது நடவடிக்கையால்தானே கு.. செல்வம் வெளியேறினார், இதுபோதாதா என்று அவர் கிச்சன் கேபினட்டில் கொந்தளித்தாக தெரிகிறது.

ஆனால், தனது ஆதரவாளரான கு.. செல்வத்தை வேண்டுமென்றே சமாதானம் செய்யாமல், டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு, இப்போது கட்சி மீது அக்கறை இருப்பது போல பேச வேண்டாம் என்று கிச்சன் கேபினட்டிடம் உதயநிதி பதிலுக்கு எகிறிவிட்டாராம். இதனால் கடுமையான மனப்புழுக்கத்தில் இருக்கும் சபரீசனை சமாதானப்படுத்த முயற்சிக்கும் ஸ்டாலின், உதயநிதி, பி.கே. நடவடிக்கையால் அதிருப்தியில் இருக்கிறாராம்.

கனிமொழி தரப்பும் உதயநிதி மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறதாம். தனது ஆதரவாளர்களை ஓரங்கட்டுவது போல, கட்சியில் தம்மையும் ஓரங்கட்ட உதயநிதி முயற்சிப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் புலம்பியதாக தெரிகிறது. கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அனுபவமில்லாத உதயநிதிக்கும், மருமகன் என்ற காரணத்தால் சபரீசனுக்கும், நண்பரின் மகன் என்பதற்காக அன்பில் மகேஷுக்கும் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அவர் வேதனைப்படுகிறாராம்.

இதனிடையே, பி.கே. வியூகங்களை சுனில் டீம் தவிடுபொடியாக்குவதால், திமுக முகாம் கலக்கத்தில் இருக்கிறது.  சுனிலின் ஆலோசனைப்படி முதலமைச்சர் அறிவித்த அடுத்தடுத்த தளர்வுகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய வியூகம் வகுத்த திமுகவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry