நாளுக்குநாள் வீரியமாகும் விவசாயிகளின் கிளர்ச்சி! பிரச்சனையை சுமுகமாகக் கையாளத் தவறிவிட்டதா மோடி அரசு?

0
33

நாடு முழுவதும், நாளை, “பாரத் பந்த்என்ற பெயரில் முழு கடையடைப்புக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவது, மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டியுள்ளது.  டெல்லி போக்குவரத்து காவல்துறை, சிங்கு, ஆச்சண்டி, பியாவோ மணியாரி மற்றும் மங்கேஷ் உள்ளிட்ட நான்கு எல்லைகளை மூடியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத்தான், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தன. ஆனால், தற்போது, அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்வது அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

போராட்டத்துக்கு காரணம் என்ன?

பசுமைப் புரட்சியின்படி, 23 அத்தியாவசிய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை, அரசு உறுதி செய்து வருகிறது. எனினும், அரசு பெரும்பாலும், அரிசி மற்றும் கோதுமையைத்தான் விவசாயிகளிடமிருந்து அதிகளவில் கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தால், பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தான், பெருமளவில் பயன் அடைந்தனர்.  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களால், அரசு கொள்முதல் செய்வதும், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதும், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என வேளாண் குடிமக்கள் அச்சப்படுகின்றனர். இதுதான் போராட்டத்துக்கு முக்கிய காரணம்.

மத்திய அரசின் சட்டங்கள் வணிகர்களுக்கே நலன் அளிக்கும் என நினைக்கும் விவசாயிகள், விவசாயத்தையே கார்ப்பரேட் மயம் ஆக்குவதோடு விவசாயிகளை வெறும் கூலி அடிமைகளாக மாற்றும் திட்டம் இது என்றும் கூறுகின்றனர். வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில், ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது.

பெரிய நிறுவனங்களுடன், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள, விவசாயிகளுக்கு தற்போதைய சட்டங்கள் சுதந்திரம் அளித்துள்ளன. ஆனால், பெரிய நிறுவனங்களை, விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை. அம்பானி, அதானி போன்றோரின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை விழுங்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அச்சத்தை போக்கி, அவர்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.

கருத்தொற்றுமை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியா?

மக்களுடன் நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். எனவே, விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.  கோவிட்-19 பேரிடர் காலத்தில் பிரச்சனைக்குரிய வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததை மோடி அரசு தவிர்த்திருக்கலாம். ஜிஎஸ்டி போன்று, வேளாண் சட்ட விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவத் தவறியது அரசின் தோல்வியாகவே பார்க்கப்படும்.  விவசாயிகளின் போராட்டத்தை நீட்டிக்கவிடாமல், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் செய்ய மோடி அரசு முன்வர வேண்டும்.

பாரத் பந்த்துக்கு விவசாயிகள் அழைப்பு

சம்யுக்த கிசான் மோர்ச்சாஎன்ற பெயரில் இந்தியா முழுதும் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன. நாடு முழுவதும், நாளை மாலை 3 மணி வரை, “பாரத் பந்த்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry