சொல்லாததைச் செய்த தமிழருவி மணியன்! சொன்னதைச் செய்வாரா ஜோதிடர் ஷெல்வி? ரஜினி விவகாரத்தில் அதிகரிக்கும் நெருக்கடி!

0
211

டிசம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை கைவிடுவதாக ஷெல்வி சவால் விடுத்திருந்ததால், அவருக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொன்னதால், கடந்த 3 மாதங்களாக அரசியல் களத்தில் அவர் பேசுபொருளாகவே இருந்து வந்தார். அவரை மையமாக வைத்து கூட்டணி, கொள்கை என்ற விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அனல் பறந்தன.

ஒரு சாரார் ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்றே கூறிவந்தனர். ஆனால், தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவரான பிரபல ஜோதிடர் ஷெல்வி, 2017-லேயே ரஜினி அரசியலுக்கு வருவதை தான் கணித்துவிட்டதாகவும், டிசம்பர் மாதத்துக்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார், இல்லை என்றால், ஜோதிடத் தொழிலை கைவிட்டு விடுவதாகவும் அறிவித்திருந்தார். மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவனின் ‘RAAVANAA’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த சவாலை முன்வைத்திருந்தார். (8.09 – 10.42)

ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று(29-12-2020) அறிவித்துவிட்டதால், ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு பொய்த்துவிட்டது. எனவே, ஷெல்வி ஜோதிட தொழிலை எப்போது விடப்போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ரஜினியின் அரசியல் பயணம் தொடங்க, உறுதுணையாக இருந்து வந்தவர் தமிழருவி மணியன். கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன், இனி தான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என அறிவித்துவிட்டார். ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், அரசியலில் இருந்து முற்றாக விலகுவேன் என்று இதற்கு முன்னர் தமிழருவி மணியன் எங்கேயும் சொல்லவில்லை. ஆனால், அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், சவால் விடுத்த ஷெல்வி மவுனம் காப்பது ஏன் என்று நெட்டிசன் சரமாரியாக கேள்வி எழுப்பு வருகின்றனர். அவரது பதிலுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

இதே ஷெல்விதான், அப்பலோவில் இருந்து ஜெயலலிதா திரும்பி வந்து ஆட்சியை தொடருவார் என்றும், 2020ம் ஆண்டு எல்லாருக்கும் சிறப்பாக இருக்கும் என்றும் சொன்னவர் என்பது நினைவுகூரத்தக்கது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஜோதிடம் பொய்யா? ஜோதிடர் பொய்யா? என்ற இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. இதனிடையே, ஜோதிடர் ஷெல்வி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் நலம் பெற வேல்ஸ் மீடியா பிரார்த்திக்கிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry