பொருந்தாக் கூட்டணியா அதிமுக-பாஜக? பாஜக-வின் பெரியண்ணன் மனப்பான்மையால் அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு!

0
10

பெரும்பான்மையைப் பொறுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என, பாஜக மேலிடப் பொறுப்பாளர் C.T.ரவி கூறியிருப்பது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பாஜக

அதிமுகபாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்காமல், பாஜக தலைவர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளரை தங்கள் கட்சி தலைமைதான் அறிவிக்கும் என்றும், ஹெச். ராஜாவுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் எனவும் தமிழக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்

மாப்பிள்ளை இவர்தான், ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுதுஎனும் கதையாக, சென்னை வந்த பாஜக மேலிடப்பொறுப்பாளர் C.T. ரவி, தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மையைப் பொருத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வார்கள் என கூறியுள்ளார்

என்ன நினைக்கிறது பாஜக?

வரும் தேர்தலில் குறைவான இடங்களில் வென்றாலும் பரவாயில்லை, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக நிர்ணயித்து பணியாற்ற வேண்டுமென பாஜக நினைக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருப்பதால், தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும், தாங்கள் நினைப்பது நடக்க வேண்டும் என்று நினைக்கிறது பாஜக. ஆனால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் மட்டும், ஒரு கட்சியை எப்போதும் கைப்பாவையாக வைத்துக்கொள்ள முடியாது. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல்கொடுத்து களமாடினால் மட்டுமே, தமிழ்நாட்டில் கட்சி வேர்ப்பிடிக்க இயலும். அதைவிடுத்து, அதிகார அச்சுறுத்தலால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அசைக்கலாம், தொண்டர்களை எதுவும் செய்துவிட முடியாது

தமிழ்நாட்டில் என்ன நடைமுறை?

பொதுவாகவே மக்களவைத் தேர்தலுக்குத்தான் தேசிய கட்சிகள் தலைமையில் கூட்டணி அமையும். அவர்கள் இடப்பங்கீட்டை முடிவு செய்வார்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக அல்லது திமுக தலைமையில்தான் கட்சிகள் தேர்தலை சந்திக்கும். அதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தங்களது  தலைமையில்தான் கூட்டணி என அதிமுக தெளிவாக அறிவித்துவிட்டது. கூட்டணி பற்றி கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி, ‘வெற்றி நடை போடும் தமிழகம்என்கிற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பாஜகவுக்கு எடப்பாடி கொடுத்த சமிக்ஞைதான் இது.

அதிமுகவை உடைக்க முயற்சியா?

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியை உடைக்க முயற்சிகள் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமியே கூறுகிறார். தற்போதைய சூழலில், கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிக்கிறார்கள். எனவே அதிமுகவை உடைத்து, ஒரு தரப்பை தங்களுக்குச் சாதகமாக வைத்து தேர்தலை சந்திக்கலாம் என பாஜக கணக்கிட்டால், அது, திமுகவுக்கே சாதகமாக இருக்கும். பாஜக நினைப்பதைப்போல 2026 தேர்தலுக்கும் அது எந்த வகையிலும் பயனளிக்காது.

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை

ரஜினியை பெரிதளவு நம்பியிருந்த தமிழக பாஜகவுக்கு, அவரது அறிவிப்பு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. அதிமுகவை கழட்டிவிட்டு, ரஜினியுடன் கைகோர்க்கலாம் என்ற எண்ணத்தில்தான், சென்னை வந்தபோது அமித்ஷா கூட்டணி பற்றி பேசவில்லை. ரஜினி இல்லை என்றாகிவிட்ட நிலையில், ஆதரவு கொடுக்க அதிமுக மட்டுமே உள்ளது. அதிமுகவை ஒதுக்கிவிட்டு புதிய அணி அமைத்து, ரஜினியை குரல் கொடுக்க வைக்க பாஜக நினைக்கலாம். ஆனால் அது எடுபட வாய்ப்பே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நண்பன் அதிமுக மட்டுமே என்ற நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது போல பாஜக நடந்துகொள்வது, குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.

தமிழ்நாட்டில் எடுபடாத மோடிஅமித் ஷா

தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் அதிமுக, திமுகவை முன்னிறுத்தி மட்டும்தான் தேர்தலை சந்திக்க முடியும். மூன்றாவது அணி எடுபடாமல் போனது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாடு முழுவதும் மோடி அலை வீசியபோது, அதை சாதாரணமாகக் கடந்து சென்ற மாநிலம் தமிழ்நாடு. எனவே, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, மோடிஅமித் ஷா இணை மண் குதிரைதான். காங்கிரஸைப் போல, திராவிடக் கட்சிகளின் முதுகில்தான் பாஜக சவாரி செய்தாக வேண்டும்.

தொண்டர்கள் மனப்போக்கு எப்படி இருக்கிறது?

கள நிலவரம் தெரியாமல் பாஜக தொண்டர்கள் புது மாப்பிள்ளை போலத்தான் வலம் வருகிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எல்லாம் எங்களுடையதுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதிமுக தொண்டர்களோ மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, பாஜகவை மறைமுகமாகச் சாடியபோது, தொண்டர்கள் எழுப்பிய கரகோஷமே இதற்குச் சான்று. கடந்த மக்களவைத் தேர்தலில் தங்களது தோல்விக்கு, பாஜக உறவே காரணம் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வேண்டாம் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

தொண்டர்கள் பலம் வலுவாக இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலில் களப்பணியாற்ற, பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவை. இதை புரிந்துகொள்ளாமல், அதிமுகவை அவமதிப்பது போன்ற செயல்களை பாஜக செய்து வருவது, அதிமுக தொண்டர்கள் மனதில் வெறுப்பை விதைப்பதாகத்தான் இருக்கும். பின்னர் தலைவர்கள் சமாதானம் ஆனாலும், தொண்டர்களிடம் நேர்மையான உழைப்பை எதிர்பார்க்க முடியாது.

தொண்டர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப, என்ன பிரச்சனை வந்தாலும் சந்தித்துக் கொள்ளலாம் என அதிமுக தலைமை முடிவெடுத்து, உறவை முறித்துக்கொண்டால், பாஜகவால் தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியுமா? என்பதை நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறகு, தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியாது, தாமரைச் செடியை வேர் பிடிக்க வைக்கவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry