தனித்து விடப்பட்டுள்ளோம்! நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர் உருக்கம்! ரஷ்யாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு!

0
202
RUSSIA UKRAINE WAR

ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ, 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார்.

ஜெலென்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் நாட்டு மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார். அதில், “ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 130 பேர் இதுவரை பலியாகினர். மேலும், 316 பேர் படுகாயமடைந்தனர்.

Also Read :- உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா! முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

நம்மோடு இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போராட யார் இருக்கிறார்கள்? இதுவரை அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினர் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் தயாராக இல்லை. எல்லோரும் ரஷ்யாவை எதிர்க்கப் பயப்படுகிறார்கள். எனவே ரஷ்யாவோடு போராடத் தனித்து விடப்பட்டுள்ளோம். ரஷ்யாவின் நாசக்காரப் படை கிவ் நகருக்குள் நுழைந்துவிட்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவைச் சரியாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கத்திய நாடுகள் முற்றிலுமாக கைவிட்டுள்ளது; இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது. சொன்ன வாக்குறுதியை மீறி ராணுவ தளவாடங்களுடன் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்யா தாக்கி வருகிறது. ரஷ்யா முதல் இலக்காகக் குறிவைத்துள்ள நானும், எனது குடும்பமும் இப்போதும் உக்ரைனில் உங்களோடு தான் இருக்கிறோம். ரஷ்யா உக்ரைன் அரச தலைவரை வீழ்த்துவதன் மூலம் உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க விரும்புகிறார்கள்.” இவ்வாறு ஜெலென்ஸ்கி கூறினார்.

RUSSIA ATTACKS UKRAINE

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை நேற்று முழுவதும் குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்று காலை குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டது. கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதன் மூலம் உக்ரைனில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசை நீக்கிவிட்டு, தனது ஆதரவு அரசை ரஷ்ய அதிபர் புடின் நிறுவ முயற்சிப்பதாக அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து ரயில்கள், கார்கள் மூலம் வெளியேற அந்நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர். தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய கண்டத்தில் மிகப் பெரிய போராக கருதப்படும் உக்ரைன் – ரஷ்யா போர் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழலில், மாஸ்கோவில் தொழில்துறை தலைவர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை கட்டாயத்தின் காரணமாகவே எடுக்கப்பட்டதாகவும், உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை படையெடுப்பு என்று சொல்வது பாரபட்சமானது என ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. அதே போல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபரை சந்தித்து படையெடுப்புக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இருநாட்டு நட்புறவு குறித்தும், பிராந்திய விவகாரங்கள் மற்றும் தெற்காசியாவின் வளர்ச்சி பற்றி பேசியதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பின்னர் புதின் நேருக்கு நேர் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் இம்ரான் கான் ஆவார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry