ரஜினியை கலாய்த்த அஜித்! வலிமை திரை விமர்சனம்! வசூலில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

0
333

ஆக்ஷன் – சென்டிமென்ட் கலவையாக, “வலிமை” திரைப்படம் மூலம் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். ரஜினிகாந்த்தை கலாய்த்து படத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வசனம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

‘சாத்தானின் அடிமைகள்’ என்ற பைக் சாகசக் குழு, சென்னை மாநகரில் செயின் பறிப்பு, போதைப் பொருள் கடத்தல், கூலிக்கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறது. இவர்களை ஒடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர், மதுரையில் உதவி ஆணையராக இருக்கும் அர்ஜுனை(அஜித்) சென்னைக்கு வரவழைக்கிறார். அம்மா, திருமணமான அண்ணன், வேலை தேடும் தம்பி என தனது கூட்டுக் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து பொறுப்பேற்கிறார் அர்ஜுன். பின்னர் குற்றக்குழுவினரை அஜித் எப்படி கண்டுபிடித்து களையெடுக்கிறார் என்பதுதான் ‘வலிமை’. காவல் அதிகாரியாக ‘ஆக்‌ஷன் பெஸ்ட்’ ஆக சிறப்பாக நடித்திருக்கிறார் அஜித்.

அஜித்தின் உடல் வலிமை, குடும்பப் பாசம், துறை மீதான மரியாதை, குற்றவாளிகளின் குடும்பங்கள் மீதான பரிவு, சமூக அக்கறை, குற்ற உலகை அணுகும் அறிவுக் கூர்மை, பைக் சாகசத் திறமை போன்றவற்றை படமாக்குவதில் இயக்குநர் ஹெச். வினோத் பெரிதாக மெனக்கெட்டிருக்கிறார். ‘சாத்தான் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட கதை’யை சொல்லும் பிரதான வில்லன் (கார்த்திகேயா) கதாபாத்திரம், புதிதாகவும் நாயகனுக்கு தண்ணிகாட்டும் ஒன்றாகவும் இருக்கிறது.

KARTHIKEYA

அஜித்தின் அம்மாவாக சுமித்ரா, அண்ணனாக அச்சுதக் குமார், தம்பியாக ராஜ் ஐயப்பா, அஜித்தின் சக ஊழியர் சோஃபியாவாக ஹூமா குரேஷி, சென்னை காவல் ஆணையராக செல்வா, மற்றொரு காவல் அதிகாரியாக ஜி.எம்.சுந்தர் என துணை கதாபாத்திரங்களில் வருபவர்கள் மனதில் பதியும்படி நடித்துள்ளனர்.

வில்லனை துரத்தும் நாயகனின் பைக் சாகச சேஸ், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது நடக்கும் சேஸிங் சண்டை ஆகிய இரண்டும் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. எடிட்டிங்கில் கெத்து காட்டியுள்ள விஜய் வேலுக்குட்டியை பாராட்டலாம். படத்தொகுப்பின் வேகம், துடிப்புக்கு தேவையான காட்சிகளை பிரம்மாண்ட சட்டகங்களில் அள்ளிக் கொடுக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. ஜிப்ரானின் இரைச்சலான பின்னணி இசை, எரிச்சலூட்டுகிறது.

VALIMAI AJITH

சில குறைகள் இருந்தாலும், ‘வலிமை’ திரைப்படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. படம் ரிலீஸான 24-ந் தேதி மட்டும் இப்படம் தமிழகத்தில் ரூ.36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ ரூ.35 கோடி மற்றும் ‘மாஸ்டர்’ ரூ. 34.80 கோடியும் வசூல் செய்திருந்தன. வசூலைத் தாண்டி‘அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும்’ மறக்கமுடியாத ஆக்‌ஷன் – சென்டிமென்ட் ட்ரீட்டாக இருக்கிறது ‘வலிமை’.

VELS MEDIA

இதனிடையே, படத்தில் அஜித் பேசிய வசனம் ஒன்று புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. தனது தம்பி மீது அஜித் நடவடிக்கை எடுக்கும் போது, அவரது தாய் கோரிக்கை ஒன்றை முன்வைப்பார். அப்போது பேசும் அஜித், ‛சிஸ்டம் சரியில்லைனு… நாம தான் சொல்றோம்…! ஆனா, நமக்குனு ஒரு விஷயம் நடக்கும் போது, நமக்கு சாதகமா பேசுறோம்…! சிஸ்டம்ங்கிறது யாரு? நாம தான் சிஸ்டம்’ என்று பேசியுள்ளார்.

இது ரஜினியை கலாய்ப்பதாகவும், சீண்டிப் பார்ப்பது போலவும் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. ஏனெனில் கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இங்கு சிஸ்டம் சரியில்லை. மொத்தத்தையும் சரிசெஞ்சா தான் தமிழகம் உருப்படும்.” என்று பேசியிருந்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry