2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதே மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அதிமுகவில் அதிகாரம் செலுத்தலாம் என சசிகலா நினைத்திருந்தபோது, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை உறுதியானது. கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் சசிகலா. பிப்ரவரி-15ம் தேதி கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.
இரட்டைத் தலைமை
இதன் பிறகு அதிமுகவில் மளமளவென காட்சிகள் மாறின. எடிப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவரது முன்னிலையில் 2017 செப்டம்பர் 12-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியது. கட்சி விதியும் திருத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இரட்டை இலை சின்னமும் இவர்கள் வசம் உள்ளது.
சசிகலா, ஓபிஎஸ்-ஐ அசைக்கும் தீர்ப்பு
தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, சசிகலா தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று பரபரப்புத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு சசிகலா, தினகரன் முகாமை எந்த அளவு அதிரவைத்துள்ளதோ, அதைவிட ஓபிஎஸ் முகாமை பதற வைத்துள்ளது.
தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக சசிகலா கூறியிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அது விசாரணைக்கு ஏற்கப்பட வேண்டும். பின்னர் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வர 10 ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே பிளான் – Bஐ செயல்படுத்த சசிகலா ஆயத்தமாகியுள்ளார். அதன் வெளிப்பாடுதான் ‘அரசியலில் இருந்து தன்னை யாரும் விரட்ட முடியாது’ என்ற சசிகலாவின் திடமான அறிவிப்பு.
Also Read: சசிகலாவுக்கு பெரும் பின்னடைவு! பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு!
சசிகலாவின் பிளான் – பி
ஜெயலலிதாவால் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற நிலையில், அதிமுக-வை எதிர்த்து அரசியல் செய்வதை சசிகலா விரும்பவில்லை. எனவேதான் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அவர் இதுவரை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஓபிஎஸ்-ஐ துருப்புச் சீட்டாக வைத்து பாஜகவை வளைக்கும் பிளான் – Bஐ கையிலெடுக்கிறார் சசிகலா.
ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக செய்வதையே தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். சட்டப்போராட்டத்தை ஒதுக்கிவிட்டு, ஓபிஎஸ் மூலம் அதிமுகவை கைவசப்படுத்துவதான் அவரது திட்டமாக இருக்கிறது. ஏனெனில் நிதி ஆதாரம் இருந்தும் அவற்றை அரசியலுக்காக செலவிட முடியாத வகையில் வழக்குகள் அவர் கையைக் கட்டியிருக்கின்றன. நிலைமையைச் சமாளிக்க பாஜகவின் தயவு அவருக்குத் தேவை.
பாஜகவின் திட்டம்
அதிமுக-வுக்குள் பாஜக ஆதிக்கம் செலுத்துவது பட்டவர்த்தனம். கட்சிக்குள் சசிகலா வருகையை ஓபிஎஸ் விரும்புகிறார். எனவே அவரை முன்னிறுத்தி பாஜக மூலமாக அதிமுகவுக்குள் நுழைவதற்கான பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாஜகவுக்கும் ஆதாயம் இருக்கிறது. சசிகலா மூலம் தென்மாவட்ட வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என பாஜக நம்புகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-வுக்கு நெருக்கடி கொடுத்து காங்கிரஸை கழட்டிவிடச் செய்யும் பணிகளைத் துவங்கியுள்ள பாஜக., அதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும்.
ஓபிஎஸ் துருப்புச்சீட்டா?
ஓபிஎஸ்க்கு சசிகலாவை ஆதரிப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியும். கட்சியில் பின்னடைவை சந்திப்பதாக உணரும்போதெல்லாம் ஓபிஎஸ் கையில் எடுக்கும் ஆயுதம் சசிகலா. தர்ம யுத்தம் நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர், தற்போது, சசிகலாவைக் காட்டியே எடப்பாடி தரப்பை பணியவைக்க காய் நகர்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன் பண்ணை வீட்டில், தனது முன்னிலையிலேயே சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் போட வைத்தார். சசிகலாவுக்கு ஆதரவாக தனது தம்பி ஓ. ராஜாவை அனுப்பி வைத்தார். அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக மறைமுகமாக கருத்து தெரிவிக்கிறார்.
இதனால், நிலையற்ற தன்மை கொண்டவர் என்றே தொண்டர்கள் இவரைக் கூறுகின்றனர். கட்சி ஆவணங்களில் முதலிடத்திலும், கட்சி நடைமுறையில் 2-ம் இடத்திலும் இருக்க வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுவிட்டார். எனவே கட்சியில் தன்னை நிலைநிறுத்த சசிகலாவை ஆதரிப்பதில் ஓபிஎஸ்க்கு எந்தத் தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை. கட்சியில் முடிவுகள் இறுதிசெய்யபட்டு, தனக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்படுவதாக ஓபிஎஸ் ஆதங்கப்படுகிறார் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனவே, சசிகலாவுக்கும், பாஜவுக்கும் இடையே பாலமாக, துருப்புச்சீட்டாக இயங்க ஓபிஎஸ்க்கு தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
Also Read : கோமா நிலையில் அதிமுக! கட்சியை அழிக்கும் சாதி அரசியல்! எதிர்க்கட்சியாக முழங்காமல் பதுங்குவதன் பின்னணி!
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
இதற்கு எடப்பாடி பழனிசாமியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். கட்சி கிட்டத்தட்ட எடப்பாடியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதிமுக-வில் தற்போது தொண்டர்கள் செல்வாக்குள்ள தலைவர் எடப்பாடி மட்டுமே. இதைக் காரணம்காட்டி சசிகலாவுக்கு உதவ வேண்டாம் என பாஜகவிடம் ஈபிஎஸ் வலியுறுத்துவார்.
அதிமுக-வுக்கு சசிகலா தேவையில்லை என்ற மனப்பான்மையை கட்சி நிர்வாகிகள் மனதில் பதியவைக்க முயற்சி எடுப்பார். கொங்கு மண்டலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம், சாதி அரசியல் என்ற புகார்கள் எடப்பாடி மீது உண்டு. இப்போதே தென்மாவட்ட கட்சியினருக்கு எடப்பாடி மீது வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. எதிரப்பை மீறி, தென்மாவட்ட வாக்குகளுக்கு சசிகலா முக்கியம், அவரை அரவணைத்துச் செல்லுங்கள் என பாஜக அழுத்தம் கொடுத்தால், ஈபிஎஸ் அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry