அதிமுக வழிகாட்டு குழுவில் மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு! செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் அதிருப்தி!

0
12

அதிமுக வழிகாட்டு குழுவில் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் மற்றும் 11 பேர் கொண்ட  வழிகாட்டு குழு அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், .பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இதன்  உச்சக்கட்டமாக நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியையும், துணை முதல்வர்  .பன்னீர்செல்வத்தையும் மாறி மாறி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று காலை முதல்வர் எடப்பாடி  பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக  எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதேபோன்று 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அறிவிக்கப்பட்டது.

இந்த குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகிய 6 பேரும்.பன்னீர்செல்வம் தரப்பில் ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன்,பா.மோகன், இரா.கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 5 பேரும் இடம் பெற்றனர்.

அதிமுக வழிகாட்டு  குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர்  தோப்பு வெங்கடாச்சலம், வளர்மதி ஆகியோர் கடந்த 2 நாட்களாக வழிகாட்டு குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி  வந்தனர்.

அதேபோன்று முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நத்தம் விஸ்வநாதனும் இடம்பெறவில்லை. அதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக  கூறப்படுகிறது. அதேபோன்று மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சண்முகநாதன்  உள்ளிட்டவர்களும் வழிகாட்டு குழுவில் இடம்பெற முயற்சி செய்தனர்.

ஆனாலும், அவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. வழிகாட்டு குழுவில் இடம் கிடைக்காததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னாள் எம்பி அன்வர் ராஜாவும் வழிகாட்டு குழுவில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தார். காரணம், முஸ்லிம்களுக்கு  அதிமுகவில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவருக்கும் பதவி வழங்கப்படவில்லை.அதேபோன்று அதிமுகவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 11 பேர் வழிகாட்டு குழுவில் ஒரு பெண்களுக்கு கூட இடம்  அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார்.

அதேபோன்று கட்சி பதவியிலும்  பெண்களுக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்தார். ஆனால், ஜெயலலிதா வழியில் செயல்படும் தற்போதைய அதிமுக தலைவர்கள், ஒரு பெண்களுக்கு கூட வழிகாட்டு  குழுவில் பதவி வழங்கப்படவில்லை என்று அதிமுக மகளிர் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry