மருத்துவமனையில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது! சுஷில் ஹரி பள்ளியில் இருந்து டி.சி. வாங்கும் பெற்றோர்!

0
64

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விரிவான விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில், கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. வேலூரைச் சேர்ந்த சிவசங்கர் பாபாதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். சாமியார் எனக் கூறிக்கொள்ளும் இவர், கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள், கண்ணாடி மாளிகை வீடு என ஹைடெக் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தன்னை கிருஷ்ணரின் அவதாரமாகக் கூறிக்கொள்ளும் இவர் ஆடும் நடனம் பிரபலமானதாகும்

11, 12-ம் வகுப்புக்கு தமிழ்பாடம் நடத்தி வந்த இவர், தனது பள்ளியில், ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவிகளிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனந்த நடனம் ஆடும்போது மாணவிகளிடம் அவர் அத்துமீறுவார் என்றும், கேள்வி கேட்கும் மாணவ, மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.

மகளிர் ஆணையம் மற்றும் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சிவசங்கர் பாபா விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது தரப்பில் கூறப்பட்டது. அதேநேரம், 72 வயதாகும் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி..டிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியுள்ளார். அவருக்கு உத்தரகாண்ட் மட்டுமின்றி டெல்லியிலும் ஆசிரமம் உள்ள நிலையில், டெல்லிக்கு தப்பினாரா என போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி..டி. போலீஸார் காசியாபாத்தில் கைது செய்தனர்.

பின்னர் டிரான்சிட் ரிமாண்ட் பெறுவதற்காக சிவசங்கர் பாபாவை டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மாலை 3.30 மணியளவில் ஆஜர்படுத்தினர். சிவசங்கர் பாபாவை, தமிழ்நாடு சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினர். இதையடுத்து அவர் தமிழ்நாடு அழைத்து வரப்படுகிறார்.

இதனிடையே, சிவசங்கர் பாபாவின் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை (டிசி) 3-வது நாளாக பெற்றோர் வாங்கி வருகின்றனர். இந்தாண்டு பிள்ளைகளுக்காக கட்டிய கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்கும்படியும் பள்ளி நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று பாலியல் புகாருக்கு உள்ளான மற்ற பள்ளிகளிலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழ்களை வாங்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry