இந்தியாவில், மழைக்காலத்தில் அதிகம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெறும் மழைக்காலத்தில் தான், பாம்புகளும் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதால் கிராமப்புறங்களில் பாதிக்கப்படுவோர் அதிகம்.
மனிதர்கள் மற்றும் பாம்புகளின் நடவடிக்கைகள் குறித்து முறையாக அறிந்துகொள்வதன் மூலம் பாம்புக் கடிக்கு ஆளாவதில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் நூற்றுக்கணக்கான பாம்பு வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நான்கு மட்டுமே ஆட்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய நஞ்சு கொண்டவை. நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய இந்த நான்கு வகை பாம்புகள்தான் அதிக நஞ்சு கொண்டவை, இந்தியாவில் பாம்புக்கடியால் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்குக் இந்த வகைப் பாம்புகளே காரணமாக உள்ளன.
கட்டுவிரியன் வகைப் பாம்புகளின் 10 மேற்பட்ட கிளை இனங்கள் தெற்காசிய நாடுகளில் உள்ளன. அவற்றில் மூன்று இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. பொதுவாகக் காடு போன்ற அடர்ந்த பகுதிகளில் காணப்படும் கட்டுவிரியன் பாம்பின் உடல் கருநீலத்தில் இருக்கும். அதன் உடம்பில் வெள்ளை நிற கோடுகளும் காணப்படும். இந்த செதில்களின் அளவு வால் பகுதியில் இருந்து தலைப் பகுதிக்குச் செல்லச் செல்ல குறைந்து காணப்படும். பொதுவாக ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்ட கட்டுவிரியன், இரவு நேரத்தில் உணவு தேடுபவை.
நஞ்சு மிகுந்த கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு மலைப்பாம்பு போல் இருக்கும். இந்த வகை பாம்பின் உடம்பில் சங்கிலி போன்று இருக்கும் கோடுகள்தான், மலைப்பாம்புகளில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன. பச்சை, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களில் தோற்றமளிக்கும் இந்த வகைப் பாம்புகள், தவளையைப் போன்ற வாயைக் கொண்டவை மற்றும் கோழியைப் போல குரல் எழுப்பும் தன்மை கொண்டவை. பெண் பாம்புகள் முட்டைகளைத் தனது வயிற்றுக்குள் அடைகாப்பதுடன், குஞ்சு பொரித்தவுடன் அவற்றை வெளியே எடுப்பது கண்ணாடி விரியன் வகை பாம்புகளின் சிறப்பு இயல்பு.
சுருட்டை விரியன் பாம்புகள் வெளிர் மஞ்சள், பழுப்பு மற்றும் மணல் போன்ற நிறத்தில் காணப்படும். இந்தப் பாம்பின் முதுகில் வெண்மையான கோடுகள் உள்ளன. அளவில் சிறியதாக காணப்பட்டாலும் இதன் விஷம் கொடியது. இந்தியாவில் பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை இந்த வகைப் பாம்புகளால் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் காணப்படும் நாகப் பாம்புகள் ஆசிய நாகம் என்று அழைக்கப்படுகின்றன. அடர் பழுப்பு, கருப்பு அல்லது அடர் பச்சை நிறத்தில் இந்தப் பாம்புகள் காணப்படும். இந்தியாவில் உள்ள கொடிய நஞ்சு கொண்ட நான்கு வகை பாம்புகளில் நாகப்பாம்பும் ஒன்று.
பாம்புகளைப் பார்க்க நேர்ந்தால், பயப்படாமல் அவற்றின் நடவடிக்கைகள் குறித்த கவனமும், விழிப்புணர்வும் இருந்தால் பாம்பு கடிக்கு ஆளாகும் அபாயம் குறையும்; பாம்பைக் கண்டவுடன் அச்சத்தில் பதறிச் செயல்படக் கூடாது என்று அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவர்கள் கூறுகின்றனர்.
உணவுக்காக வேட்டையாடும் ஆயுதமாக நஞ்சு இருப்பதால், பாம்புகள் அவற்றை மிகவும் கவனமாகத்தான் பயன்படுத்துகின்றன. தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில்தான் ஒரு பாம்பு மனிதனைக் கடிக்கிறது. எனவே பாம்பைக் கண்டால் பதற்றத்தில் அதை விரட்ட முயலக்கூடாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பைக் கண்டவுடன், அதற்கு இடையூறு விளைவிக்காத வகையில் சிறிது நேரத்திற்கு அமைதி காக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஆபத்துணர்வு ஏதுமின்றி அமைதியாக பாம்பு அங்கிருந்து விலகிச் சென்றுவிடக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பாம்புகளுக்கு ஒளிந்துகொள்ள இருள் சூழ்ந்த இடங்கள் தேவைப்படுகின்றன. அப்படி அவை ஒளிந்துகொள்வதால், வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றோர் அறைக்கு இடம்பெயரும் போது பொதுவாக அவை நம் கண்களில் படுவதில்லை. பொதுவாக சாதாரண வகை பாம்புகளைத் தவிர, நஞ்சுள்ள பாம்புகள் மனிதர்களைக் கடிப்பதற்கு முன் எச்சரிக்கை விடுக்கின்றன என்று பாம்பு பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகின்றனர்.
கட்டுவிரியன் பாம்பு ஒருவரை எப்போது கடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் மூன்றும் கடிக்கும் முன் எச்சரிக்கின்றன. தனது நாக்கை வெளியே நீட்டியப்படி சீறுவதும், உடம்பில் உள்ள செதில்களைத் தரையில் தேய்த்து ஒலி எழுப்புவதும் பாம்பு ஒருவரை கடிப்பதற்கு ஆயதமாகிவிட்டது என்பதற்கான எச்சரிக்கைகள். பாம்புகளின் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வதன் மூலம் ஒருவர் பாம்புக் கடியிலிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றி கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாம்பு ஒருவரை கடித்துவிட்டால், பாம்பு கடித்த இடத்தை சோப்பு நீரால் கழுவ வேண்டும். பாம்பு கடித்த நேரத்தை நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நஞ்சுள்ள பாம்பாக இருந்தாலும் நஞ்சற்ற பாம்பாக இருந்தாலும் கடித்துவிட்டது என்றால் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும். பாம்பு கடித்த நபர், தனது உடலை அசைக்க விடக்கூடாது. உடலை அசைக்கும்போது நஞ்சு உடம்பில் வேகமாக பரவும். பாதிக்கப்பட்டவரை நடக்க அனுமதிக்கக் கூடாது. அவரை வாகனம் மூலம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பாம்பு கடித்த இடத்தின் மேலே, கயிற்றாலோ அல்லது துணியாலோ கட்டக்கூடாது. பாம்பு கடித்த இடத்தில் பிளேடு அல்லது கத்தியால் கீறக்கூடாது. குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுக்கக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த மருந்துகளையும் கொடுக்கக்கூடாது. வாயால் விஷத்தை உறிஞ்ச முயற்சிப்பது பெரும் தவறு.
பாம்பு கடித்த பகுதியை துணியால் இறுக்கமாகக் கட்டுவதால் ரத்த ஓட்டம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியையோ, உறுப்பையோ துண்டிக்க நேரிடலாம். பாம்பு கடித்த பகுதியைச் சுற்றி இருக்கும் ஆபரணங்களையும் உடனடியாக கழற்ற வேண்டும். பாம்பு கடித்த நபரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ, அந்தளவுக்கு அவரது உயிர் காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும்.
ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவரது உடலில் என்ன நடக்கும்? என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக, அருகருகே இரண்டு பற்களால் ஏற்பட்ட காயங்கள், காயங்களைச் சுற்றி வீக்கம் மற்றும் சிவத்தல், கடித்த இடத்தில் வலி, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி மற்றும் குமட்டல், மங்கலான பார்வை, வியர்வை மற்றும் உமிழ்நீர் அதிகம் சுரத்தல், முகம் மற்றும் கைகால்களில் உணர்வின்மை ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
கருநாகத்தின் நஞ்சு நரம்பியல் நஞ்சு(neurotoxic) வகையைச் சேர்ந்தது. கண்ணாடி விரியனின் நஞ்சு, குருதிமண்டல நஞ்சு(haemotoxic) வகையைச் சேர்ந்தது. ‘நரம்பியல் நஞ்சு வகை பாம்பு ஒருவரைக் கடித்தால், அதன் நச்சு அவரின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. குருதிமண்டல நச்சு ஒருவரின் ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களை உடைத்து உள் ரத்தப்போக்கை ஏற்படுத்தும்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘பாம்பு கடித்தால் அதன் அறிகுறிகள் தோன்ற இரண்டு முதல் இரண்டரை மணிநேரம் ஆகும். ஆனால், பாம்பு கடித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு நஞ்சின் விளைவுகள் உடலில் தெரியத் தொடங்கும். 30-45 நிமிடங்களுக்குள் நஞ்சின் தீவிரம் அதிகபட்ச நிலையை அடையும். நான்கு முதல் ஆறு மணிநேரத்தில் நஞ்சின் தீவிரம் உச்சத்தை எட்டும். அறிகுறிகள் உடனடியாகத் தோன்றாவிட்டாலும் கூட, பாம்பு கடித்த இடத்தில் மட்டும் அதிக வலி இருக்கும்’ என மருத்துவர்கள் விளக்கமாகத் தெரிவிக்கின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry