சனாதன சர்ச்சை! உதயநிதி மீது FIR பதியக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு! தமிழக அரசு, உதயநிதி, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ்!

0
89
Supreme Court and Udhayanidhi Stalin

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” எனத் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், “இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ள, உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி. ஜெகந்நாத், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை உத்த நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Also Read : பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!

வழக்கறிஞர் ஜெகந்நாத் தனது மனுவில், “கடந்த 2ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், மாநில அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டது அரசமைப்புக்கு எதிரானது, அரசியலமைப்பின் 25 மற்றும் 26 வது பிரிவுகளை மீறுவதாகும். இந்த மாநாட்டில் இந்து மதத்தை குறிவைத்து வெறுப்புணர்வு பரப்பப்பட்டது. இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதி, சேகர்பாபு, பீட்டர் அல்ஃபோன்ஸ், ஆ. ராசா, தொல். திருமாவளவன் மற்றும் இவர்களது ஆதரவாளர்கள், சனாதன தர்மம் அல்லது இந்துத்துவம் பற்றிப் பேச தடை விதிக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்.

இந்த மாநாட்டுக்கு காவல்துறை எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது? மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த அமைப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின்படி, வெறுப்புப் பேச்சுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒரு நோடல் அதிகாரியை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.

Also Read : சனாதனத்தை HIV, தொழுநோயுடன் ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சைப் பேச்சு! உதயநிதியை காப்பாற்ற ஆ. ராசா-வை களமிறக்கிய திமுக!

ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டுக்கு காவல்துறை உண்மையிலேயே அனுமதி வழங்கியிருந்தால், காவல்துறைக்கு அரசியல் தலையீடு இருந்ததா? வெளிநாட்டில் இருந்து மாநாட்டு நடத்த நிதியுதவி கிடைத்ததா? என்பதை இந்த நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அனுமதி வழங்காமல் இருந்தால், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எப்படி இன்றுவரை கைது செய்யப்படவில்லை? என்பதை விளக்குமாறு உத்தரவிட வேண்டும்.

சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்கிறோம் என்ற போர்வையில், சனாதன தர்மத்தை இழிவாகப் பேசும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்காக ஒரு இயக்கம் செயல்படுகிறது. இது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான அரசு ஆதரவுடன் நடைபெறும் பிரச்சாரமாகும். அரசே தவறான யோசனைக்கு நிதியுதவி செய்கிறது. தற்போது அவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.

கர்நாடகாவின் ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்து தர்மத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், மாநாடுகள் எதுவும் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

Also Read : சனாதனத்தை எதிர்க்கவே I.N.D.I. கூட்டணி! சனாதன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய I.N.D.I. கூட்டணியில் பிரச்சாரக் கமிட்டி! உண்மையை ஒப்புக்கொண்ட திமுக!

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, மற்றும் தமிழக அரசு, டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட 12 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்தியதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சென்னையில் நடந்த சனாதன ஒழுப்பு மாநாட்டில் பங்கேற்று வெறுக்கத்தக்க வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி, மாநாட்டில் பங்கேற்ற மற்றவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாரர் பி.ஜெகநாத் உயர்நீதிமன்றத்தை நாடாமல் நேரடியாக இங்கு வந்தது ஏன்? எங்களை ஏன் காவல்நிலையமாக மாற்றுகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

Also Read : பேச்சு சுதந்திரம் கட்டுப்பாடற்றது கிடையாது! மத விவகாரங்களில் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது! ஐகோர்ட் கண்டிப்பு!

இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சர் உதயநிதியின் பேச்சு, நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒரு தனி நபர் பேசியதாக இருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, நம்பிக்கைக்கு எதிராக ஒரு அமைச்சரும், அரசு இயந்திரமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிற வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளுடன் இது இணைக்கப்படாது. சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக, தமிழக அரசு, டிஜிபி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, எம்.பி.க்கள் ஆ. ராசா, திருமாவளவன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்ஃபோன்ஸ் உள்ளிட்டோர் நவம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Case : B Jagannath v. The State of Tamil Nadu| W.P.(C) No. 1001/2023

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry