கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் கேரளாவில் “இண்டி” கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காசர்கோடு மாவட்டம் திரிகரிப்பூரில் சிபிஐஎம் கட்சி கட்டட திறப்பு விழாவின் போது பேசிய பினராயி விஜயன், “அரசியல் எதிரிகளை துன்புறுத்தவும், களங்கப்படுத்தவும் மாநில காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. நமது கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி விவாதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் ஆதாயங்களுக்காக சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்த சமூக மற்றும் காட்சி ஊடகங்களுக்கு சில நிறுவனங்கள் மூலம் பெருமளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை காங்கிரஸ் செலவு செய்யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்க, லட்சக்கணக்கில் செலவு செய்து காங்கிரஸ் அவதூறு பரப்புகிறது. சமூக ஊடகங்கள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அதைப் பயன்படுத்தும் போது நாம் நமது நாகரிகத்தை இழக்கக்கூடாது.
காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிரிகளின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், போலியான செய்திகளைப் பரப்புவதுடன், தனிப்பட்ட தாக்குதல்களையும் நடத்துகின்றனர். கடந்த முறை சட்டசபைத் தேர்தலில் அவர்கள் தோல்வி அடைந்தனர். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற அவதூறுகளை பரப்பத் தயாராக உள்ளனர். இந்த முறை பொய்யான செய்திகளை பரப்பி, அரசியல் எதிரிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, இலக்கு வைத்து செயல்படத் தயாராகிவிட்டனர்.” இவ்வாறு அவர் பேசினார்.
‘கோட்டயம் குஞ்சச்சன்’ என்ற முகநூல் பக்கத்தின் மூலம் இடதுசாரித் தலைவர்கள் சிலரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறான படங்களைப் பகிர்ந்ததாக, திருவனந்தபுரம் பாரசலாவைச் சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் இளைஞரணித் தலைவரான 26 வயதான அபின் கோடங்காரா என்பவரை கேரள போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்தே பினராயி விஜயன் காங்கிரஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள பிரிவு கேட்டுக் கொள்ள உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு காங்கிரசுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட இருக்கிறது.
பாஜக வேட்பாளருக்கு எதிராக ராகுல் காந்தி போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று சிபிஐ கருதுகிறது. தங்கள் கட்சியும், காங்கிரசும் I.N.D.I.கூட்டணியில் இருப்பதால், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடாமல் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும் என்று CPI நம்புகிறது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front -LDF) ஆட்சியில் இருக்கிறது. தங்கள் கட்சித் தலைவர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த காங்கிரஸ் பெருமளவில் செலவிடுவதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிட எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் கேரளாவில் “இண்டி” கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry