Friday, March 24, 2023

அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால்..! பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்! புரட்சித் தலைவி அம்மாவோடு ஒப்பிட்டுக்கொள்வது தவறு!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அளித்துள்ள பேட்டியில், அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். அதுமட்டுமின்றி, அம்மா (ஜெயலலிதா) எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா (கருணாநிதி) எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்று தான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். அண்ணாமலையின் பேச்சால் அதிமுக – பாஜக கூட்டணி முறியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல. அதிமுக ஒரு பெரும் சமுத்திரம். அதில் வந்து கல் வீசினால் கல் தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் பெரிய அளவில் இருந்துகொண்டு தான் இருக்கும். அலைகள் அடித்துக்கொண்டு தான் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இன்று மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பலர் விருப்பப்பட்டு சேர்கின்றனர். விருப்பப்பட்டு சேரும்போதும் அதை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. அது அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும்.

Also Watch : டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக மெகா முறைகேடு | Tamil Nadu Transport Scam | CK Thulasidoss

திமுகவில் இருந்து ஒரு ஒன்றிய தலைவர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். அதேபோல் எல்லா கட்சியில் இருந்தும் வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை எழுச்சி, வலிமை, பலம்வாய்ந்து, பெரிய அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அனைவரும் வந்து சேர்கின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் இருப்பது தான் நல்ல விஷயம்’ என்றார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை கோவில்பட்டியில் பாஜகவினர் தீ வைத்து எரித்து எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆவது நிலைமை? இது போன்று செய்யக்கூடாது. இது கண்டனத்திற்குரிய விஷயம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து அவர்களை பாஜக கட்சியில் இருந்து நீக்குவது தான் நல்ல விஷயம்.

Also Read : மின் நுகர்வோருக்கு அடுத்த பேரிடி! ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற உத்தரவு!

எங்கள் கட்சியில் இருந்து தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் அதற்கு வந்து அவர்களால் (பாஜக) யாராலும் ஈடுகட்டமுடியாது. அண்ணாமலை எப்படி தலைவரானார் என்ற விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. அவர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், நான் அம்மா (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா) போன்று தலைவர் என்று கூறாதீர்கள். அதை சொல்வதற்கு யாருக்கும் இந்தியாவிலும் சரி இனி ஒருவன் பிறக்கப்போவது கிடையாது. அம்மா ( ஜெயலலிதா) போன்ற தலைவர் இனி பிறக்கப்போவது கிடையாது.

செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது. ஒரு கட்சியில் கூட்டணியில் ஒரு சில உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது அந்த கட்சி தலைவரின் பண்பு. தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டக்கூடாது. அந்த வகையில் கூட்டணி தர்மம் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் அதை உணர்ந்து அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் நல்லது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை’ என்றார்.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! 7 நாட்கள் வரை நீடிக்கும் பாதிப்பு!

கடந்த 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக ஆட்சி ஒரு 420 ஆட்சி என்று பாஜகவை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,
தலைவர் அளவில் கருத்து சொல்லும்போது அதற்கு கண்டிப்பாக எதிர்வினையாற்றுவோம். அட்ரெஸ் இல்லாதவர்கள் சொல்லும் கருத்திற்கெல்லாம் நான் விலாசம் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அவர்களையெல்லாம் நான் அங்கீகாரம் செய்ய விரும்பவில்லை. அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது’ என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles