திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தட்டுப்பாடு! விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

0
68

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தங்களது உழைப்பால் நாட்டு மக்களுக்கு உணவை வழங்கிக்கொண்டிருந்த நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நடுமுதுகை உடைக்கும் பல்வேறு தில்லு முல்லு வேலைகளை திமுக அரசு சமீப காலமாக செய்து வருகிறது.

கோடை காலங்களில் ஆற்றுப் பாசனம் மற்றும் ஏரிப் பாசனங்களில் தண்ணீர் வரத்து இல்லாத நேரங்களில், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் பாசனம் போன்றவற்றையே நம்பி விவசாயப் பணிகள் நடைபெறும். இந்த நேரத்தில் தான் மின்சாரம் விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும். திமுக ஆட்சியில், ஏற்கெனவே போதிய விதைநெல் கிடைக்காமலும்; உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்கள் தட்டுப்பாட்டாலும் விவசாயிகள் அவதியுற்று வந்தனர். மேலும், கனமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை திமுக அரசு முழு நிவாரணம் வழங்கவில்லை.

Watch : டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக மெகா முறைகேடு | Tamil Nadu Transport Scam | CK Thulasidoss

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படியும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக பெற்றுத் தரவில்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் போது, இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விற்க முடியாத அவலமும் நிகழ்ந்து வருகிறது. இந்த நேரத்தில், திமுக அரசு தற்போது விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க முடியாது என்றும், முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

அதிமுக ஆட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு உள்ள குறைகளைக் களைந்து, அவர்களின் வாழ்வு ஒளிர எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததை விவசாயப் பெருங்குடி மக்கள் நன்கு அறிவார்கள். எந்த விதத்திலும் நம் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி, விவசாய உற்பத்தியைப் பெருக்கி ஜெயலலிதா ஆட்சியும், எனது தலைமையிலான அதிமுக அரசும் சாதனை படைத்தது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

Also Read : அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால்..! பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்! புரட்சித் தலைவி அம்மாவோடு ஒப்பிட்டுக்கொள்வது தவறு!

துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக்கொண்ட இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சாரத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலைமாறி, தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, சீரான மின் வினியோகத்தையும் தராமல், விவசாயிகளுக்கு விளையாட்டு காட்டுகிறது இந்த அரசு. 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும் போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் விவசாயிகள், தற்போதைய இந்த ஆட்சியாளர்களின் தாந்தோன்றித் தனமான நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! 7 நாட்கள் வரை நீடிக்கும் பாதிப்பு!

ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த திமுக அரசு, தமிழ்நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

இது போன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்று சொன்னால், அந்த மின்சார உற்பத்திச் செலவு குறையும் என்ற ஒரு தப்புக் கணக்கை இந்த ஆட்சியாளர்கள் போடுகிறார்கள்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், மின்சார வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2021-22ல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வருவாய் 72 ஆயிரத்து 107 கோடி ரூபாயாக இருந்தது என்றும், மின் கட்டண உயர்வால் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை கசக்கிப் பிழிவதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் நிலையில், தேவையான அளவு நிலக்கரியை கையிருப்பில் வைத்து, அனல் மின் நிலையங்களில் அதன் முழு அளவு உற்பத்தியைத் துவக்கி, கோடை காலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் இவை மூன்றும் முழுமையாக பெறப்படுமானால் விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நிலை ஏற்படும். உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்ற உயரிய லட்சியத்தோடு வாழும் விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்காமல், போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வேளாண் தொழில் மென்மேலும் சிறந்தோங்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry