தமிழ்நாடு முழுவதும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும்போது, தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது மத்திய அரசின் ”அக்னிபாத்” திட்டத்திற்கு, தமிழக திராவிட மாடல் அரசு சான்றளித்தது போல் ஆகிவிடும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
அந்த அமைப்பின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காலிப்பணியிடங்களை நிரப்ப சொல்லி தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் இணை செயல்முறைகள் எண்: 34087/சி2/இ2/ நாள்:23.06.2022-ல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் கற்றல் கற்பித்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலமாக, தற்காலிகமாக – தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள அந்த உத்தரவு அனுமதிக்கிறது.
இடைநிலை ஆசிரியர் ரூ 7,500, பட்டதாரி ஆசிரியர் ரூ10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரூ 12,000 என்ற தொகுப்பூதியத்தில் 38 மாவட்டங்களில் 13,331 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. நியமனம் செய்யும்போது ஆர்வமாக பணியில் சேருவார்கள் என்பது உண்மைதான். பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கும் போது, “அக்னிபாத்” திட்டத்திற்கு நாம் சான்றளித்தது போல் ஆகிவிடாதா? தற்காலிக நியமனம் செய்யப்படுவோரின் எதிர்கால நலனைக் கருதித்தானே ‘அக்னிபாத்’ திட்டத்தை நாம் எதிர்க்கிறோம்.
தற்காலிக நியமனம் பெற்ற ஆசிரியர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படும்போது இனம் தெரியாத உள்ளப் பாதிப்பினை அடைவார்கள். தமிழ்நாடு முழுவதும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். அவர்களது தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள்காலம் வரை செல்லும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று உறுதியளித்தார்கள். அந்த உறுதியின்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். நிரந்தரமாக நியமனம் செய்யும் போது கற்பித்தல் நடைமுறையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்படும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிய பெருமையும் அரசுக்கு கிடைக்கும்.
பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெறுவதை தவிர்த்து விட்டு, கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுவதற்கு, உடனடியாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோரை முறையான காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்திட கோருகிறோம்.
Also Read : TET தேர்வு சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் 01.06.2006 முதல் முந்தைய ஆட்சியாளர்களால் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை – பட்டதாரி – முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 52,500 பேருக்கும், ஒரே ஆணையின் மூலம் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்த சரித்திர சாதனையினை நெஞ்சிருக்கும் வரை யாரலும் மறக்கத்தான் முடியுமா? அதுமட்டுமல்ல, நமது அரசின் காலத்தில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் “அறவே இருக்காது” என்ற கருணாநிதியின் குரல் இன்னமும் நெஞ்சங்களில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கல்வியாண்டின் இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்றுவதற்கு வாய்ப்பளிப்பது பற்றி முதலமைச்சர் பரிசீலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் இதுதொடர்பான அரசாணை வெளிவர இருக்கிறது என்பதை தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இதற்காக அரசுக்கு நன்றி பாராட்டுகிறோம்.
Also Watch : அமைச்சரைவையை விட அந்த அதிகாரிதான் பவர்ஃபுல் | அடுத்து குஜராத் மாடலா? விளாசும் அண்ணாமலை!
தமிழ்நாட்டில் ஒராசிரியர் பள்ளிகளே இல்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, அனைத்து ஓராசிரியர் பள்ளிகளையும் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றும் வகையில் கொள்கை முடிவெடுத்து ஆசிரியர் நியமன அறிவிப்பினை வெளியிட வேண்டுமென, முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பரிந்துரையை செய்யுமாறு பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry