கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் செல்லும் வழியில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்த பலர் மரணம் அடைந்த செய்தி வேதனையையும், அதிர்ச்சியும் அளித்துள்ளது. விஷ சாராயம் குடித்து சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ந்து நான் கூறி வருகிறேன். பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறேன்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி வருகிறது என்று காவல்துறை மானியக் கோரிக்கையில் நான் பேசினேன். இதை அரசு, சரியான முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டு இருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இதற்கு எல்லாம் முழுப் பொறுப்பு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தான். எனவே தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
பெருகும் கள்ளச்சாராய பலி! விடியா அரசின் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்! திருச்சியில் எடப்பாடியார் பேட்டி! @EPSTamilNadu @EPS4TN @AIADMKITWINGOFL pic.twitter.com/fjvw0LgHlt
— ADMK TODAY (@AdmkToday) May 15, 2023
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடை செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதை பொருள், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க 2.O, 3.O என்று ஓ போடுவது தான் இவர்களின் வழக்கமாக உள்ளது. சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து இதைத் தடுக்க முடியவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற நாளை மரக்காணம் செல்ல உள்ளேன்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 500 கடைகளை மூடுவதாக சொல்லி 100 கடைகளை திறக்கிறார்கள். விளையாட்டு மைதானம், திருமண மண்டபத்தில் கூட மதுபானத்தை செய்யலாம் என அரசு கூறியுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, #ராஜினாமாசெய்_ஸ்டாலின் , #resignstalin போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry