புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய இடம்பிடிக்கும் தமிழகத்தின் செங்கோல்! வரலாற்றுப் பின்னணியுடன் சுவாரஸ்யமான தகவல்!

0
243
New Parliament building, the 'Sengol'

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் `செங்கோல்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் `செங்கோலை’ நிறுவவிருப்பதுதான் அந்த முக்கிய அறிவிப்பு. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால், திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து பெறப்பட்ட சோழர்கால மாதிரி`செங்கோல்’, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

அப்போது என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” என்று கேட்க, குழப்பமடைந்த நேரு, மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம்.

Also Read : கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

உடனே ராஜாஜி, ‘‘தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்” என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 – 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

“ஆதீனம் அந்த நேரத்தில் கடும் காய்ச்சலில் இருந்தார். ஆனாலும், சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டார். ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த, `சடைச்சாமி’ என்றழைக்கப்படும் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும், மடத்தின் ஓதுவார்களையும் டெல்லிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் கூடவே மங்கள இசை முழங்க மடத்து வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.

Also Read : கட்டாயத் தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை? வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக வலியுறுத்தல்!

1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11:45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலின் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுன்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து, இறை நாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்தார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயம். நேரு கையில், செங்கோலை சடைச்சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.

குமாரசாமி தம்பிரான் வழங்கிய செங்கோலுடன் நேரு

சுதந்திரம் பெறும் நிகழ்ச்சிக்கான மேடை அருகில், ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரி நடந்திருக்கிறது. அலகாபாத் நகரிலுள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவன், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆதீனம் வழங்கிய செங்கோல், தற்போது அங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் அந்த செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள் முன்வைக்கும் கேள்வியாகும்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று முறைப்படி அறிவித்தார்.

அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார். மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry