செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

0
106
Representative Image

‘செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial sweeteners) நீண்ட காலம் பயன்படுத்தும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes Mellitus) வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, பெரியவர்களுக்கு இதய நோய் – இறப்பு அபாயம் அதிகரிக்கவும் அவை காரணமாகலாம்’ என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்திருக்கிறது.

‘உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தொற்றாநோய்களைத் தடுக்கவும் சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளைப் (Non-sugar sweeteners) பயன்படுத்துபவர்கள், இனி மறுபரிசீலனை செய்வது நல்லது’ என்றும் அந்த நிறுவனம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. மருத்துவ உலகில் இது முக்கியமான விவாதப்பொருளாக மாறியுள்ளது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அந்த நோயின் தீவிரத்தைக் குறைக்க, வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, அதற்கு மாற்றாகக் குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளைக் காபி – தேநீரில் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. ‘சாக்கரின்’, ‘அஸ்பார்டேம்’, ‘ஸ்டீவியா’, ‘சுக்ரலோஸ்’, ‘அசிசல்ஃபேம்’ உள்ளிட்ட சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகள் பலதரப்பட்ட உணவுப் பொருள்களில் மட்டுமின்றி குளிர்பானங்கள், செயற்கைப் பழச்சாறுகள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகின்றன.

Also Read : புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய இடம்பிடிக்கும் தமிழகத்தின் செங்கோல்! வரலாற்றுப் பின்னணியுடன் சுவாரஸ்யமான தகவல்!

வெள்ளைச் சர்க்கரையைவிடப் பல நூறு மடங்கு அதிக இனிப்புச் சுவை உள்ளதாலும், கலோரி ஆற்றல் அதிகமில்லை என்பதாலும் இத்தகைய இனிப்பூட்டிகளின் பயன்பாடு எல்லாத் தரப்பினரிடமும் அதிகரித்திருக்கிறது. 2022இல் மட்டும் உலகச் சந்தையில் செயற்கை இனிப்பூட்டிகளின் விற்பனை மதிப்பு 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிவிட்டது என்றால், இதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

உலக அளவில் மக்கள் மத்தியில் மருந்துப் பயன்பாட்டையும் உணவுப்பொருள் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் அமெரிக்க உணவு – மருந்து நிர்வாகம் (FDA), செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதில் ஆபத்து இல்லை என்று 2015இல் அறிவித்தது. அதன் நீட்சியாக, பயனாளிகள் அன்றாடம் தங்களுக்குத் தேவைப்படும் கலோரிகளில் 10%க்கும் குறைவான கலோரிகளைச் செயற்கை இனிப்பூட்டிகள் வழியாக எடுத்துக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் 2015 மார்ச் 4 அன்று பச்சைக்கொடி காட்டியது.

இத்தகைய இனிப்பூட்டிகளைத் தினசரி 5% என்ற அளவில் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடையைக் குறைக்கவும் அவை உதவுகின்றன என அறிவித்தது. இதையொட்டி உலக நாடுகள் பலவும் செயற்கை இனிப்பூட்டிகளைப் பொதுச்சமூகம் பயன்படுத்துவதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன.

Also Read : குக்கீஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய், கேன்சர் வரக்கூடும்! எச்சரிக்கும் ஆய்வு ரிப்போர்ட்! Vels Exclusive

இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஸ்டீவியா (Stevia) என்னும் பிரபலமான செயற்கை இனிப்பூட்டியில் ‘எரித்ரிட்டால்’ (Erythritol) என்னும் வேதிப்பொருள் இருப்பதாகவும், இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ரத்தநாள அடைப்பு தொடர்பான சிக்கல்களை அதிகரிப்பதாகவும் மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

இந்த ஆய்வு முடிவுகள் கொடுத்த அழுத்தத்தில், சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகள் குறித்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் உலக சுகாதார நிறுவனம் மறுஆய்வு செய்தது. மொத்தம் 283 ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், ‘சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளின் பயன்கள்: உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள்’ (Use of non-sugar sweeteners: WHO guidelines) என்னும் தலைப்பிலான அறிக்கையைக் கடந்த வாரம் வெளியிட்டது.

அதன்படி, 2015இல் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. அதாவது, சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகள் உடல் எடையைக் குறைக்கப் பயன்படுவதில்லை. மாறாக, அவற்றை நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்தும்போது, இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 23%, இதயநோய்க்கான வாய்ப்பு 32%, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 19%, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 13% அதிகரிக்கிறது என்று இப்போது எச்சரித்துள்ளது.

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

இந்த எச்சரிக்கையில் எந்த அளவு நம்பகத்தன்மை உள்ளது என்று உலக அளவில் உள்ள உணவியலாளர்களும் மருத்துவ நிபுணர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தப் புதிய வழிகாட்டுதலானது, மக்களிடம் தேவையில்லாத அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் ஆதாரமாகக் காட்டும் ஆய்வுகளின் எண்ணிக்கை 300ஐ நெருங்கினாலும் அவை ஒவ்வொன்றும் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளே அன்றி, பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல! மேலும், அந்த ஆய்வுகளில் பலவும் சோதனை எலிகளிலும், சுண்டெலிகளிலும்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்டவை குறைவு.

அதிலும், பயனாளிகளிடம் கேள்வி கேட்டுப் பதில் பெற்ற ஆய்வுகள்தான் (Observational studies) அதிகம். இம்மாதிரியான ஆய்வுகளில் பயனாளிகளுக்குச் செயற்கை இனிப்பூட்டியைக் கொடுத்து ஆய்வு செய்வதில்லை. புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளது என்பதை உறுதிசெய்யவும் போதுமான தரவுகள் இல்லை.

அடுத்ததாக, ஸ்டீவியா இனிப்பூட்டியைப் பயன்படுத்தியவர்களுக்கு அதில் இருக்கும் எரித்ரிட்டால் வேதிப்பொருள்தான் மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்பதை எந்த ஆய்வும் உறுதி செய்யவில்லை; காரணம், அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பலருக்கும் மாரடைப்பு வருவதற்கான உயர் ரத்த அழுத்தம், மிகை கொலஸ்டிரால் போன்ற ஆபத்துக் காரணிகள் (Risk factors) ஏற்கெனவே இருந்துள்ளன.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

பொதுவாக, உடல் எடையைக் குறைக்க, சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளை நவீன மருத்துவம் பரிந்துரைப்பதில்லை; மாவுச் சத்து மிகுந்த உணவு வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்ளவே பயனாளிகளுக்குப் பரிந்துரைப்பதுண்டு.

தமிழகத்தின் பிரபல சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வி.மோகன், உலக சுகாதார நிறுவனத்தின் இந்தப் புதிய வழிகாட்டுதல் குறித்துப் பேசும்போது, “செயற்கை இனிப்பூட்டிகளின் பயன்பாடு குறித்துத் தமிழகத்தில் எங்கள் நிறுவனமும் ஆய்வு நடத்தியது. உடற்பருமன் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்ததுபோல் ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை. வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவில் சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்பதே எங்கள் ஆராய்ச்சியின் முடிவு” என்றார்.

அப்படியானால், தவறு எங்கே இருக்கிறது? “சர்க்கரை அல்லாத இனிப்பூட்டிகளில் கலோரிகள் குறைவு என்ற காரணத்தால், பயனாளிகள் அத்தகைய இனிப்பூட்டிகள் கலந்துள்ள உணவு வகைகளையும் குளிர்பானங்களையும் பழச்சாறுகளையும் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். அதுதான் ஆபத்தாகிறது. உதாரணமாக, செயற்கை இனிப்பூட்டி கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் இனிப்புப் பலகாரத்தை நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

அந்தப் பலகாரத்தில் இனிப்பு மட்டுமா இருக்கிறது? மைதா இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; நெய் இருக்கிறது. இந்த மூன்றும் ‘கலோரிக் கூடுகள்’ என்பதைப் பயனாளிகள் மறந்துவிடுகின்றனர். ஆக, மைதாவும் நெய்யும்தான் அவர்களுக்கு உடற்பருமனை ஏற்படுத்தி, ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’யைத் (Insulin resistance) தூண்டி, இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்பட வழி அமைக்கின்றன; செயற்கை இனிப்பூட்டிகள் காரணமல்ல” என்கிறார் வி.மோகன்.

மேலும், “வரும் ஜூன் மாதம் அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், எங்கள் ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கிறோம். அப்போது உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதல் தொடர்பாகவும் விவாதிப்போம். அந்தக் கருத்தரங்கில் செயற்கை இனிப்பூட்டிகள் குறித்துப் பயனாளிகளுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்துவிடும்” என்கிறார் அவர். அப்படி ஒரு சரியான முடிவு தெரியும் வரை நாமும் காத்திருப்போம்.

நன்றி : இந்து தமிழ் திசை.
கட்டுரையாளர் – கு. கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு – gganesan95@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry