ஒரு கம்பெனிக்காக கல்வியைப் பாழ்படுத்துவதா? இனி, எமிஸ் பதிவு செய்யமாட்டோம்! அச்சுறுத்தலை எதிர்கொள்ளத்தயார் என ஐபெட்டோ ஆவேசம்!

0
351
As promised by the Minister of School Education, the teachers have decided not to register on the EMIS app and are concentrating on the teaching work - AIFETO Annamalai.

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிட்டோஜாக் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி அறைகூவலினை ஏற்று எமிஸ் இணையதளத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவினை தவிர்த்து மற்ற அனைத்து பதிவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு அதில் உறுதியாக இருக்கும் மாவட்ட, வட்டார அமைப்புகளை பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநில அளவில் விசாரித்ததில், சில மாவட்டங்கள் 70% சதவீதத்திற்கும் குறையாமல் EMIS இணையதளப் பதிவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார்கள். சில ஒன்றியங்கள் முழுவதும் விடுவித்துக் கொண்டு மானம் காத்த இயக்க செயல் வீரர்களாக தலைநிமிர்ந்து நிற்பதை கண்டு இதயம் மகிழ்ந்து பாராட்டுகிறோம். விரல் விடக்கூடிய சில ஒன்றிய, மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் உள்ள மாவட்ட வட்டாரக் கிளைகளில் ஏனோதானோவென்று ஒதுங்கி இருந்ததால், ஆசிரியர்கள் தம்மையும் அறியாமல் பதிவு செய்து வருகிறார்கள் என்ற செய்தியை உணர முடிகிறது.

Also Read : பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பதவி உயர்வு? 20ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை! பள்ளிக் கல்வித்துறை முயற்சிக்கு ஐபெட்டோ பாராட்டு!

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குடும்பத்தில், EMIS இணையதள அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு புள்ளம்பாடி ஒன்றியத்தில் மரணமடைந்த சகோதரி தொடங்கி, வெளியே தெரியாத பல மாரடைப்பு மரணங்கள் நடந்துள்ளன. ஆசிரியர்கள் பலர் விருப்ப ஓய்வில் சென்று கொண்டுள்ளார்கள். ஆண் ஆசிரியர்கள் பலர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வருவதையும், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி நலன் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருவதையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கற்பித்தல் பணியாற்ற ஆசிரியர்களால் நேரம் ஒதுக்க முடியாத நிலைமையில்தான் டிட்டோஜாக் போராட்டம் அறிவித்தார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நவம்பர் 1 ஆம் தேதி முதல் எமிஸ் செயலி பதிவுப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள் என்று உறுதி அளித்தார்கள். பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் க. அறிவொளி, அக்டோபர் 25 முதல் எமிஸ் பதிவுப் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழியினை ஏற்று நவம்பர் 1ஆம் தேதி முதல் வருகை பதிவினை தவிர ஏனைய பதிவுகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுத்து கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நடந்தது நடந்ததாக இருக்கட்டும்! இன்று முதல் எமிஸில் வருகைப் பதிவை தவிர வேறு பதிவுகள் செய்வதில்லை என்பதில் உறுதி எடுத்து நிறுத்தி விடுவோம். நமக்கு காலக்கெடு (Deadline) விதிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. அவரவர் பணியினை அவரவர் சரியாக செய்தால் போதும். நமக்குள்ள பணி, கற்பித்தல் பணிதான்.

Also Read : மத்திய அரசின் கொள்கையினை அடிபிறழாமல் அமல்படுத்துவதா? நிறைவேற்றியதாகச் சொன்ன வாக்குறுதிகள் என்னென்ன? ஐபெட்டோ சரமாரிக் கேள்வி?

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு செல்ஃபோனில் வாரம் தோறும் அசெஸ்மென்ட் தேர்வு வைத்தீர்கள். நாங்கள் எதிர்க்குரல் எழுப்பிய பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு செல்ஃபோனில் அசெஸ்மெண்ட் தேர்வு நடத்துகிறீர்களே? எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற காலக் கொடுமை இதுவாகும், தேர்வுக் கொடுமை இதுவாகும். நாங்கள் பாடத்தை நடத்துகிறோம், வந்து பார்த்துக் கொள்ளுங்கள்..! எந்த கம்பெனிக்கோ நிதி ஒதுக்கீட்டைச் செய்து, அந்தக் கம்பெனி சொல்கின்ற அத்தனை இணையதளப் பதிவுகளையும் செய்ய வேண்டும் என, அவர்கள் பணப் பலன்களை பெறுவதற்காகக் கல்வி நலனை பாழ்படுத்த வேண்டாம்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தினைத் தொடங்கியபோது, தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்கள். தலைமையாசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டால் கற்பித்தல் பணி பாதிக்கப்படும், அதனால் சத்துணவுப் பொறுப்பினை ஏற்று நடத்த இயலாது என்பதை சங்கங்கள் வாரியாக தெரியப்படுத்தினோம். அதிகாரிகளோ, தலைமை ஆசிரியர்கள் தான் சத்துணவுத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று கெடுபிடியுடன் அரசாணைகளை வெளியிட்டார்கள். சத்துணவு பொறுப்பில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்கிறோம் என்று சங்கங்கள் வாரியாக அறிவித்து வெளியே வந்தோம்.

சில மாவட்டங்களை தேர்வு செய்து எம்ஜிஆர் பள்ளிகளை பார்வையிட்டார்கள். தலைமையாசிரியர்கள் சத்துணவு பொறுப்பினை ஏற்று நடத்தவில்லை என்பதை நேரில் கண்டார்கள். அதன் பிறகுதான் சத்துணவு வழங்குவதற்கு தனியாக சத்துணவு அமைப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்கள். கருணாநிதி காலத்தில் ஆசிரியர்களுக்கு அளித்த கற்பித்தல் சுதந்திர உணர்வினை… அவரது பிள்ளை காலத்தில் பாதிப்புக்கு ஆளாக்க வேண்டாம் என பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ஐபெட்டோ அமைப்பு கண்டனம்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி இணையதளப் பதிவு செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் எங்களை விடுவித்துக் கொள்கிறோம். இது ஆட்சிக்கோ, பள்ளிக் கல்வித்துறைக்கோ எதிரான போராட்டம் அல்ல; கற்பித்தல் பணியில் மட்டும் எங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வதற்காக எமிஸ்(EMIS) இணையதளப் பதிவுகளில் இருந்து முழுவதும் விடுவித்துக் கொள்கிறோம்.

இனி எவராவது காலக்கெடு(Deadline) விதித்து எச்சரிக்கை செய்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், மாணவர்களின் கல்வி நலனை மனதில் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவோம்! எப்படிப்பட்ட நடவடிக்கை வந்தாலும், நடவடிக்கை எடுப்பவர்களைப் பற்றிய உள்ளும் புறமும் ஆய்வினை பட்டியல் போட்டு வெளியிட தயாராக உள்ளோம்..! இணையதளப் பதிவுகள் செய்யவில்லை என்பதற்காக எவரேனும் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களேயானால், அதற்காக நடைபெறும் வீரம் செறிந்த ஜேக்டோ ஜியோ போராட்டத்திற்கு வலுவினை சேர்ப்போம்..!” இவ்வாறு அறிக்கையில் ஐபெட்டோ அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry