தயாரிப்பாளர் போனி கபூர் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம், அதிர்ச்சி, மகிழ்ச்சி என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை‘. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கியவரும் ஹெச். வினோத்தான். தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீண்ட நாட்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டி காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதேபோல், ‘நாங்க வேற மாறி’ பாடலும் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என பேச்சு எழுந்தத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் உச்சிக்கே சென்றனர்.
இதனிடையே, ‘வலிமை‘ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘வலிமை‘ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Happy to announce that #Valimai will hit the screens on Pongal 2022.#ValimaiFromPongal#ValimaiPongal #Valimai#Ajithkumar #HVinoth @BayViewProjOffl @ZeeStudios_ @punitgoenka @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv @bani_j @iYogiBabu
— Boney Kapoor (@BoneyKapoor) September 22, 2021
‘வலிமை‘ படத்திலிருந்து சின்ன வீடியோ ஒன்றை படக்குழு நாளை வெளியிடவுள்ளது. படம் பொங்கல் வெளியீடு என்பதால் சில மாதங்கள் கழித்தே டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ‘வலிமை‘ படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இதனிடையே, இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வலிமை திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று போனி கபூர் அறிவித்திருப்பது அஜித் ரசிகர்களை ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது. அறிவித்துள்ளார் தீபாவளிக்கு ‘வலிமை’ வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு படம் தள்ளிபோயுள்ளது அவரது ரசிகர்களில் ஒருதரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரம் அடுத்த ஆண்டு எங்களுக்கு தல பொங்கல் என ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry