‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

0
313
ஐபெட்டோ அண்ணாமலை | அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஜாக்டோ ஜியோ சார்பாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். கொள்கை ரீதியாக முடிவெடுத்து அந்தப் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த நாள் தொடங்கி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படும் வரை பள்ளிக் கல்வி ஆணையரை நேரில் சந்திக்காத ஒரு தலைமை நாம்தாம் என்பதில் கொள்கை உறுதியினை எடுத்து காத்து வந்தோம்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக்கல்வி ஆணையர் பதவியினை விடுவித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியினை கொண்டு வந்து வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம். பள்ளிக்கல்வி ஆணையர் பதவியினை விடுவித்திட வேண்டும் என்று உறுதியாக இருந்து அமல்படுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இதயம் நிறைந்த நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read : பிளஸ் 2 விடைத்தாளில் பெரும் குளறுபடி! கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது அம்பலம்! பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி!

ஆணையர் பொறுப்பிலிருந்து க.நந்தகுமார் இ.ஆ.ப., மாறுதல் செய்யப்பட்டு வெளிவந்த அறிவிப்பினை பார்த்தவுடன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பரிந்துரையும் இடம்பெற்று இருந்ததை எங்களால் உணர முடிகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு வரவேற்பினையும் நன்றி பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதவியில் இருக்கிறபோது, அதிகாரமிக்க இன்னொரு பதவி தேவையில்லை என்பதனை, நேரில் செல்கின்ற போதெல்லாம் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடம் வலியுறுத்தினோம். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர்லா உஷா இ.ஆ.ப., ஆணை வழங்கியுள்ளார்கள். அவருக்கு நன்றி பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றபோது மரியாதை நிமிர்த்தமாக அவரை நாம் சந்தித்தோம். அப்போது, “கல்விக் காவலர் நெ.து. சுந்தர வடிவேலு காலம் முதல் இருந்து வருகின்ற பதவி, பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியாகும். பள்ளிக்கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், உறுதியாக நடக்கும் என்றும் நம்மிடம் உறுதிப்படுத்தினார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நல்லெண்ண செயல்பாட்டிற்கு மனம் திறந்த நன்றி பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனிடையே, முதலமைச்சருக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும் முன்வைக்கிறோம். பேராசிரியர் அன்பழகன் பள்ளிக் கல்வி வளாகத்திற்குள், ‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை உடனடியாக நீக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் என்ற நீண்ட நாளைய பெயர்பதிவு மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த நாள்தான் எங்களை பொறுத்தவரையில் விடுதலை பெற்ற நாளாக அமையும்.

பள்ளிக்கல்வி இயக்குநருக்கு வாழ்த்து

பள்ளிக்கல்வி இயக்குநராக முனைவர் க.அறிவொளி அவர்கள் மீண்டும் வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது உள்ள இயக்குநர்களில் பணியில் மிகவும் மூத்தவர். முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படாத பொறுப்புகளில் பணிபுரிந்து வந்தாலும் அந்தந்த பொறுப்புகளில் பொறுப்புடன் செயல்பட்டு அந்தந்த பதவிக்கு பெருமையினை சேர்த்தவர் என்பதை மறுக்க முடியாது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு பதிலாக பள்ளிக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து செயல்படுத்துகிற பொழுது, ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருவார்கள் என்பதை நெஞ்சத்தில் நிறுத்தி, இனிய அணுகுமுறையுடன், செய்ய வேண்டியதை விதிகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தி, முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் பெருமைகளை சேர்த்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நல்லெண்ண உணர்வுடன் பதிவு செய்து, தங்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read : மின் கட்டணம் மீண்டும் உயருகிறது? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்கப்படலாம் என தகவல்!

தொடக்கக் கல்வி இயக்குநருக்கு வாழ்த்து

இரண்டு முறை பள்ளிக்கல்வி இயக்குநராக பதவி வகித்தவர், பல்வேறு இயக்குனர் பொறுப்புகளில் பணியாற்றி இருந்தாலும், தொடக்கக் கல்வி இயக்குநராக பதவி வகிக்காதவர். நம் இனிய அணுகுமுறைக்கு சொந்தக்காரர். முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ளது கண்டு மகிழ்ச்சியுறுகிறோம், நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இயக்குனர்கள் பணியிட மாற்றத்தால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகனுக்கும், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள முனைவர் முத்து. பழனிசாமிக்கும், தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் செயலராக பொறுப்பேற்றுள்ள பெ.குப்புசாமிக்கும் வரவேற்பினையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முனைவர் த.ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்ககம் (பணியாளர் தொகுதி) இணை இயக்குநராகவும், முனைவர் பூ.ஆ.நரேஷ், தேர்வுத் துறை (இடைநிலை) இணை இயக்குநராகவும், எஸ்.கோபிதாஸ், பள்ளிக் கல்வி (மேல்நிலை) இணை இயக்குநராகவும், எம்.ராமசாமி, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராகவும், கே. சசிகலா, பள்ளிக்கல்வி (இடைநிலை) இணை இயக்குநராகவும், கே.செல்வகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும், முனைவர் எஸ்.சுகன்யா, தொடக்கக் கல்வி (நிர்வாகம்) இணை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளது கண்டு மகிழ்ச்சியுறுகிறோம்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry