‘நீட்’ விலக்கு பெற சாத்தியமில்லை! மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்! சுகாதாரத்துறை அமைச்சர் சூசகம்! 

0
40

தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு அமலில் இருப்பதால், தேர்வுக்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு நீட் தேர்வுப் பயிற்சி மையங்கள் தொடர்ந்து இயங்கும் என்று அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டது போன்று ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது, அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் நீட் பயிற்சி மையங்களில் கட்டண குறைப்பு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வை முதன்முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது ஆட்சியில் இருந்த கருணாநிதி நீதிமன்றம் சென்று அதற்கான தடையாணையை பெற்றார். அதே போல, முதலமைச்சர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுப்பார். நீட் தேர்விற்கு எதிராக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானம் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதனால் தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தெளிவான தீர்மானம் நிறைவேற்றப்படும்என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கடந்த 9-ந் தேதியே வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read : இணையதளத்தில் வெளியாகிறது நீட் விண்ணப்பம்! ஆகஸ்ட் 1-ல் நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படுவது உறுதி!

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என்று உறுதியாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சியமைத்த பின்னர் நீட் பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்தது. நீட் தேர்வு நடத்தமாட்டோம் என்று  அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் தற்போது, நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் நிச்சயம் நீட் தேர்வு நடக்கும் என்பதை அரசு சூசமாக வெளிப்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry