குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 22-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்?
கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.
மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்.
இதுகுறித்து பிபிசி-க்கு பேட்டி அளித்துள்ள நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன், “மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும்.
மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள்” என்று கூறினார்.
Also Read : பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மெத்தனாலை தனி மனிதர்களின் கைகளில் கிடைக்கவிடாமல் செய்ய ஏற்கனவே பல கடுமையான விதிகள் அமலில் உள்ளன. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே மெத்தனால் பயன்படும் என்பதால், அதனை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன.
மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மெத்தனாலை வாங்க வேண்டுமென்றால் அதற்கான உரிமம் வைத்திருப்பது அவசியம். அது போக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு இருப்பு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை தொழிற்சாலைகள் பதிவு செய்து பராமரிப்பது கட்டாயம்.
இவை அத்தனையையும் மீறி கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளுக்கு மெத்தனால் கிடைக்கிறது. எந்தெந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதேபோல், கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் அறிந்திருப்பார்கள். அவர்களிடம் மெத்தனாலை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே காரணம். இந்த சட்டவிரோத கூட்டுதான், உயிரைப் பறிக்கும் மெத்தனால் கள்ளச்சாராயம் தயாரிக்கக் காரணமாகிறது.
Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?
இந்நிலையில், சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள ரசாயன ஆலையில் இருந்து 1,000 லிட்டர் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான விஷ சாராயத்தை தயாரிக்க இந்த மெத்தனாலே பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆலை உரிமையாளரான இரசாயனப் பொறியாளர் இளையநம்பி மற்றும் அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31), ஆகிய 5 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து போலீஸார் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு மற்றும் பெருங்கரணை பகுதியில் டாஸ்மாக் போலி மதுபானம் அருந்திய எட்டுபேர் உயிரிழந்தனர். மரக்காணம் விவகாரத்தை விட, போலி டாஸ்மாக் மது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் சின்னம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டி போலி மது விநியோகம் செய்வது யார்? செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற போலி மது விற்பனை செய்யப்படுகிறதா? இதன் பின்னணியில் இருப்பது யார்?
அதேபோல், திருக்கழுக்குன்றத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஏஜென்ட்டுகளுக்கு ஸ்பிரிட் விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகிறது. மெத்தனால் சாராயம், ஸ்பிரிட் சாராயம், போலி மதுபானம் போன்றவற்றின் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் யார் என்பது காவல்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்ல்லை. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
Featured Videos from Vels Media
நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry