சென்னையில் அதிகரிக்கும் மின்வெட்டு! அமைச்சரின் ‘அடடா’ விளக்கத்தால் அதிர்ந்துபோயுள்ள தலைநகர்வாசிகள்! தூக்கமின்றி தவிப்பதாக வேதனை!

0
86
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப்படம்

தலைநகர் சென்னையில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தகிக்கும் வெயிலால் மக்கள் திணறி வரும் நிலையில், தலைநகரின் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருப்பதாக சமூகவலைதளங்களில் சென்னைவாசிகள் புலம்புகின்றனர்.

மின் கம்பங்களில் அணில்கள் ஓடுவதால் தான் அதிகளவில் மின் தடை ஏற்படுகிறது என முன்பு தெரிவித்திருந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இப்போது, “தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, மின்தடைதான் ஏற்படுகிறது” என புதிய விளக்கத்தைத் தந்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Also Read : பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

தலைநகரில் சில தினங்களாக 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இரவிலும் புழுக்கம் அதிகரித்து காணப்படுவதால், ஃபேன், ஏ.சி. போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தரமணி, திருவொற்றியூர், கொளத்தூர், போரூர், ஜாபர்கான்பேட்டை, வியாசர்பாடி, மேற்கு சைதாப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், ராயபுரம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை, பல்லாவரம், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு பிரச்னை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

“பகல், இரவு என பாரபட்சமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் தூக்கமின்றி தவிக்கிறோம். பகலில் அலுவலகம் சென்று பணியை மேற்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. மின்சாரம் இருக்கும் நேரத்திலும் சீரான மின் விநியோகம் இல்லை, மின்சாரம் ஏற்ற இறக்கமாக(fluctuation) இருப்பதால் இயந்திரங்கள் செயல்படாத நிலை ஏற்படுகிறது. மின்வெட்டு குறித்து எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதில்லை. சில நேரம் 45 நிமிடத்தில் வந்துவிட்டாலும், சில இடங்களில் 3 மணி நேரம் வரை ஆகிறது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தால், அவர்கள் ஃபோனை எடுப்பதே இல்லை. இதனால் மிகுந்த அவதிப்படுகிறோம்” என வேதனை தெரிவிக்கின்றனர் சென்னைவாசிகள்.

Also Read : தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது! திமுகவின் கைக்கூலிகளாக மாறிய சமூகப் போராளிகள், நடிகர்கள்! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

அதேநேரம் “சென்னையை பொறுத்தவரை அதிக மின்நுகர்வு காரணமாக மின் அழுத்தம் ஏற்படுகிறது, சில இடங்களில் மின்தடை ஏற்பட இதுவே காரணம். மின் அழுத்தம் ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்திட கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்நுகர்வு அதிகரித்துள்ளது. 4016 மெகாவாட் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாளுக்கு நாள் கூடும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது ஏற்படுவது மின்வெட்டு அல்ல, மின்தடை. மின்வெட்டு என்றால் பற்றாக்குறை ஏற்பட்டு மின்சார வாரியத்தால் மின் விநியோகம் நிறுத்தப்படுவது. மின்தடை என்பது பராமரிப்பு பணிகளுக்காகவும், கேபிள் கோளாறு போன்றவற்றால் மின்சாரம் தடைப்படுவதாகும். போதிய மின்சாரம் மின்சார வாரியத்திடம் உள்ளது. அதேசமயம் மின் விநியோகத்தில் பிரச்னை இல்லை எனச் சொல்லவில்லை. மின்நுகர்வு அதிகரிப்பதால் கேபிளில் பழுது ஏற்படுவதே மின்தடைக்கு காரணம்.” என்றார்.

”கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பது அடிப்படையான விஷயம். இரவில் புழுக்கம் அதிகரிப்பதால் ஏ.சி பயன்பாடு அதிகரிக்கும் என்பதும் ஊரறிந்த விஷயம். அதிகப்படியான மின்நுகர்வால் மின்வெட்டு ஏற்படுகிறது என்ற காரணத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கேற்றவாறு தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?” என சமூக செயற்பாட்டாளர்கள் வினவுகிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry