
தமிழ் சினிமா எதை நோக்கிச் செல்கிறது? ஒரு பக்கம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட படங்களும், இன்னொரு பக்கம் சாதி ரீதியான பிரிவினையை தூண்டும் படங்களும் அதிகம் வருகின்றன. இப்போது சென்சார் அனுமதியுடன் பாலியல் திரைப்படங்களும் வர உள்ளன.
இதுவரை திரைக்கு வராத கதைகளை இயக்க வேண்டும் என்கிற பெயரில், சில இயக்குநர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துகின்றனர். இதன் நீட்சியாக, அண்மையில் வெளியாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் பாலியல் விரசங்களால் விரவிக்கிடக்கிறது. அதிலும் பள்ளி மாணவியை மையப்படுத்திதான் அவ்வளவு விரசங்களும். பள்ளி மாணவியை எப்படித் தவறாக சித்தரிக்கலாம் என்கிற கேள்வி எழும் அதேநேரம், இந்தப் படத்தை இயக்கியிருப்பது ஒரு பெண் என்பது அதிர்ச்சியின் உச்சம்.

பொதுவாகத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக தங்களை நினைத்துக்கொண்டு, அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்பது பதின்ம இளைஞர்கள்/இளைஞிகளின் உளவியல். இந்தப் பருவம் நல்லதைவிட கெட்டதை எளிதில் கிரகித்துக்கொள்ளும். அதற்குத் தீனி போடும் விதமாக இந்தத் திரைப்படத்தின் 2 நிமிட டீசரே பாலியல் விரசங்களால் நிரம்பி வழிகிறது. காதாநாயகி வேடமேற்றுள்ள அந்த மாணவி கதாபாத்திரம், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை சர்வசாதாரணமாக உச்சரிக்கிறது.
நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு பாய் ஃபிரண்ட் தேவைப்படுகிறான்; என்னை பொறுத்த வரைக்கும் கிளாஸ் லீடராக இருக்கறதை விட பாய் ஃபிரண்ட்டோட இருக்கறதுதான் மாஸ்; நீ புளூ ஃபிலிம் பாப்பியா; குடிபோதையில் ஆண்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என நாயகியின் ஒரு தோழி சொல்ல, இன்னொருவரோ அவர்களோட செக்ஸ் வச்சுக்க எனக்கு பிடிக்கும் என்கிறார்; புதிதாக வகுப்பு வந்த மாணவனின் நரம்பு புடைத்துள்ள கைகள் பிடித்திருப்பதாக கூறுவது;
F..k them..! எனக்கு நீ மட்டும் போதும்; நீ எதை செய்யக் கூடாதுன்னு சொல்றியோ நான் அதைத்தான் செய்வேன், என்னைத் தடுக்க நினைத்தால் அந்த பையனுடன் ஓடிப் போவேன்; நீ சொன்னதைத்தான் செய்யனும், நீ சொன்னமாதிரிதான் இருக்கனும்னு ஃபோர்ஸ் பண்ண, நான் சூசைடு பண்ணிக்குவேன் என கதாநாயகியான மாணவி அம்மாவிடம் கூறுவது என சகித்துக்கொள்ள முடியாத, மாணவர்களை உளவியல் ரீதியாக தொந்தரவு செய்யும் வசனங்கள்.
உனக்கு எப்ப ஃபர்ஸ்ட் பீரியட்ஸ் வந்தது? அவ சோல் மச்சான், என காட்சிகளில் மாணவர்கள் பேசும் வசனமும் ஒழுங்கீனத்தின் உச்சம். கதாநாயகி பிராமண வகுப்பை சார்ந்தவள் என்பதைக் காட்ட, ஒரு வயதான பெண்மணி ‘ஏய் பீட ஆத்துல இல்லயா நீ?’ என்ற வசனம் வைக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா கோ’ என பாத்திரங்களைத் தட்டுவதுபோன்று பிரதமர் மோடியை கிண்டலடித்து காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியான மாணவி பாரில் குடிப்பது, ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது, பள்ளியிலேயே மாணவருடன் கதாநாயகி சில்மிஷத்தில் ஈடுபடுவது; நீ நடப்பது, பேசுவது, பாடங்களில் ஃபெயில் ஆவது என எல்லாமே ஆண்பிள்ளைகளை போல உள்ளது என கதாநாயகியை டீச்சர் திட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆண் பிள்ளைகளை இவ்வளவு மோசமானவர்களாக சிந்தரிப்பது பெண்ணியத்தில் வருகிறதா?
பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பதில் இந்தக் கால பெற்றோர் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதுபோன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களும், சூழல் மாற்றங்களும் பதின்ம மாணவர்கள் / மாணவிகளின் குடும்பங்களையே புரட்டிப்போட்டு விடுகிறது. மாணவர் சமூகத்தையே சீரழிப்பதுதான் புரட்சியா? பெண்ணியமா?
பகுத்தறிவு பேசுவதாக நினைத்துக்கொள்வோருக்கு எப்போதுமே பிராமணர் சமூகம் மென்மையான, எதிர்ப்பின்றி அணுகக்கூடிய இலக்காகவே இருக்கிறது. மற்ற சாதிகளை இதுபோன்று சித்தரித்து காட்சிகள் வைக்க தைரியம் இருக்கிறதா? என்று கேட்க இது சரியான நேரம் இல்லை. எந்தச் சமூகத்தை அடையாளப்படுத்தினாலும் அல்லது எந்த அடையாளமும் இல்லாமல் இதுபோன்ற காட்சிகளை வைத்தாலும் அது தவறுதான்.
Enjoyment Without Resposibility என்ற ஈவெரா பாணி பெண்ணியம் பேசுவதாக நினைத்து, இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில், வர்ஷா பரத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பதின்ம பருவத்தில் இருக்கும் மாணவ / மாணவிகள் மீது இந்த டீசர் எந்தளவு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும், உளவியல் பாதிப்பை உண்டாக்கும்? என்பதை தயாரிப்பாளர்களும், இயக்குநரும் உணரவில்லையா?
மாணவர்கள் தற்கொலைகளைத் தடுப்பது பெரிய போராட்டமாக இருந்துவரும் நிலையில், கதாநாயகியான மாணவி, தனது அம்மாவிடம் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார். Emotional Blackmail செய்வது எப்படி? எப்படியெல்லாம் தவறாக பேசலாம்?, தவறாக பழகுவதற்கான வழிகள் என்னென்ன?, தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் தவறில்லை, பள்ளிப் பருவத்திலேயே மது குடிப்பது, உடலுறவு வைத்துகொள்வது தவறில்லை உள்ளிட்டவைகளையே இந்த 2 நிமிட டீசர் போதிக்கிறது. காதலைத் தாண்டி காமத்தை மட்டுமே பேசுகிறது. இதை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்பதுதான் தெரியவில்லை. மொத்தப் படத்தில் இன்னும் என்னென்ன விரசங்கள் உள்ளனவோ?
காதலிப்பதாக கூறி பெண்ணை அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் பதின்ம பருவ சிறுமிகள் மூன்று பேரை காதலிப்பதாகக் கூறி, இளைஞர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த டீசர் வெளியாவதற்கு முன்பாக, ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெளியாகும் முன்பே இதுபோன்ற தவறுகள் நடந்து வரும் நிலையில், இந்தப் படம் வெளியாகி சமுதாயத்தில் என்னென்ன சீரழிவை ஏற்படுத்தப்போகிறதோ என நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. இந்தத் திரைப்படம் சாதி வன்மத்தை, பாலியல் சீரழிவை ஏற்படுத்தி, பெற்றோரின் தூக்கத்தை கெடுப்பதாகவே இருக்கும்.
இந்த டீசருக்கு பரவலாகவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தைத் தயாரித்துள்ள வெற்றிமாறன் மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரையும், படத்தின் டீசரை தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் விஜய்சேதுபதி போன்றோரும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். அசுரன் திரைப்படத்தில் ‘படிப்புதான் நம்மை காப்பாத்தும்னு’ வசனம் வைத்த வெற்றி மாறன், மாணவர் சமூகத்தையே சீரழிக்கும் திரைப்படத்தை தயாரித்திருப்பது சரியா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
Virtue is a struggle? Self discipline is regressive? Promiscuity is power, rebellion…
But only in a brahmin family.
Why not be daring and refreshing about other communities/religion?
That wud have been honest at least. #Stopfakenarratives #Badmovie https://t.co/wNiJyDZqjf— Kasturi (@KasthuriShankar) January 27, 2025
இந்த டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருந்த பா.ரஞ்சித், “பேட் கேர்ள் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இது உண்மையிலேயே ஒரு துணிச்சலான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். இவ்வளவு துணிச்சலான கதையை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படம் பெண்களின் போராட்டங்களையும் சமூக எதிர்பார்ப்புகளையும் ஒரு தனித்துவமான புதிய அலை சினிமா பாணி மூலம் சக்தி வாய்ந்த முறையில் சித்தரிக்கிறது. வாழ்த்துகள், வர்ஷா” என்று பாராட்டியிருந்தார்.
ரஞ்சித்தின் இந்தப் பதிவை ரீட்வீட் செய்த பிரபல இயக்குநர் மோகன் ஜி, “ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்தக் கும்பலுக்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்ப்பது? பிராமண அப்பா அம்மாவை பழிவாங்குவது ட்ரெண்ட் அல்ல. உங்கள் சாதியில் உள்ள பெண்களை வைத்து இது போன்ற படங்களை இயக்கி, உங்கள் குடும்பத்தாரிடம் காட்டுங்கள்” என்று விமர்சித்திருந்தார்.
Teaser of my good friend Varsha’s “Bad girl” produced by Vetrimaaran. God bless Varsha. Great things are waiting for you. https://t.co/2nV3Trnqx7
— Dhanush (@dhanushkraja) January 26, 2025
டீசரின் அனர்த்தங்களை நியாயப்படுத்தியுள்ள இயக்குநர் வர்ஷா பரத், பெண் என்றால் பத்தினித் தன்மை, தாய்மை, பூப்போல தான் இருக்கணுமா? எதற்கு அவளை ஒரு வட்டத்தில் அடைக்கிறீங்க என கேள்வி எழுப்பி உள்ளார். வெற்றி மாறன், அனுராக் காஷ்யப், பா. ரஞ்சித், விஜய் சேதுபதி, நடிகர் தனுஷ் உள்பட பேட் கேர்ள் திரைப்படத்தை ஆதிரிப்போருக்கு ஒரே கேள்விதான்? இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது போல உங்கள் வீட்டு பெண் குழந்தை நடந்துகொண்டால், நீங்கள் சம்மதிப்பீர்களா? சம்மதிப்போம் என்றால் அதை வெளிப்படையாக அறிவியுங்கள். தமிழகத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தை சீரழிக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry